‘பால்வாடி கட்சிக்கு பாடம் புகட்டுவோம்’ – ஆதவ் அர்ஜூனாவுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

sekar babu

ஒரு காலத்தில் ‘லீடர் லீடர்’ என்று கைகட்டி நின்றவர், இப்போது எதையும் பேசலாம் என்ற நோக்கத்தில் பேசுகிறார் என ஆதவ் அர்ஜூனாவை அமைச்சர் சேகர் பாபு காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம் நடத்தியது. அப்போது பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்குப் பிறகு மிகவும் பிரபலமான தலைவராக இருந்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வர நினைத்தபோது திமுக குடும்பத்தின் மிரட்டல் காரணமாக பின்வாங்கினார் என்று கூறினார்.

ADVERTISEMENT

ஆதவ் அர்ஜூனாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ரஜினி ரசிகர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

ரஜினி மறுப்பு

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா பேசியதில் உண்மை இல்லை என்றும், “காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்” என்றும் ரஜினிகாந்த் தனது அறிக்கை மூலம் மறுப்பு தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, இன்று (சென்னையில்) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையாக விமர்சித்தார்.அவர் பேசியதாவது:”அதிகாரம் கைக்கு வருவதற்கு முன்பே அதிகார திமிரோடும், பணம் உள்ளது என்பதால் எதையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற மமதையோடும், பெரியவர்கள்-சிறியவர்கள் என்று பாராமல் நடந்துகொள்கிறார்கள்.தமிழனின் மரபு வந்தவரை வரவேற்கும் தமிழகம்; விருந்தோம்பலில் சிறந்தது தமிழகம்; மற்றவர்களை மதிக்கும் தமிழகம்.

ஆனால் சமீப கால அரசியலில் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று எதையும் பேசலாம் என்ற நாகரீகம் தவறி, நயவஞ்சகத்தோடு சுற்றித் திரியும் கூட்டத்திற்கு வில்லிவாக்கத்தில் தகுந்த பதிலடியை திமுக கொடுக்கும்.ஒரு காலத்தில் ‘லீடர் லீடர்’ என்று கைகட்டி நின்றவர், இப்போது எதையும் பேசலாம் என்ற நோக்கத்தில் பேசுகிறார். இருக்கையில் கூட அமர மாட்டேன் என்று பின்னால் நின்றவர், தற்போது எங்களுடைய இயக்கத்திற்கு அறிவுப் பரிசோதனை பற்றி பேசுகிறார்.இது உண்மைதான்; அவர்கள் அறிவுப் பரிசோதனை மேற்கொள்வதற்கு சரியான இடம் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைதான்.

ADVERTISEMENT

தமிழக அரசியல் களத்தில் 60 ஆண்டுகளாக கால் நகம் முளைத்தது முதல் தமிழகத்தின் கால்தடம் பதியாத இடமே இல்லை என்ற வகையில் பணியாற்றியவர் முதல்வர் ஸ்டாலின். மற்ற அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்; இந்தியாவின் இரும்பு மனிதர். அப்படிப்பட்ட எங்கள் தலைவரையும் இயக்கத்தையும் இழிவுபடுத்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், எங்கள் தாயே தடுத்தாலும் அவரை விடமாட்டேன் என்ற கொள்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன் களத்தில் வீறுகொண்டு நிற்பான்.

முறையாகத் தேர்தலை சந்திக்கும் நபர், 75 ஆண்டு கால கட்சி நடத்தி பவள விழா கண்ட பேரியக்கம், நிச்சயம் பால்வாடி இயக்கத்திற்கு தகுந்த பாடத்தை கற்பிக்கும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share