தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் வரவிருக்கும் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, இன்று டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசிப்பதற்காகவும், தேர்தல் பணிகள் தொடர்பாகவுமே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தற்போது நான்கு, ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. எனவே, உரிய நேரத்தில் ஆலோசனை நடத்துவதற்காக நான் டெல்லி வந்தேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை எந்தச் சிக்கலும் இல்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். கூட்டணியில் இணைய வேண்டிய கட்சிகள் ஏற்கனவே இணைந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை; அதனை அவர்களும் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டனர்.
இன்னும் நான்கு நாட்களில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
எடப்பாடி – அமித்ஷா சந்திப்பை கடுமையாக விமர்சித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு VS டெல்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா? தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா? மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா?
தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்.” என தெரிவித்துள்ளார்.
