எடப்பாடி டெல்லி பயணம் : மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு அதிமுக பதில்

By Pandeeswari Gurusamy

|

Published on 20 Mar 2026, 2:36 PM

bomb threat for aiadmk headquarters

எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணிகள், தொகுதி பங்கீடு குறித்து கலந்தாலோசிக்கும் வகையில் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்பதாக தெரிவித்து வரும் நிலையில் எடப்பாடியின் டெல்லி பயணத்தை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள் என முதல்வர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,”டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

2011 தேர்தலுக்காக, டெல்லியில் தவமாய் தவமிருந்து, காங்கிரஸ் தலைமைக்காக 6 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து, கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை கருணாநிதியும் நீங்களும்?

ADVERTISEMENT

உங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும், மகளுக்கு “திகார்” என்று காங்கிரஸ் சொல்ல, “பகீர்” என்று பதறிப் போய், வயதான காலத்திலும் டெல்லிக்கு பறந்து போய், தீர்ப்புக்கு சில நிமிடங்கள் முன் சோனியா காந்தியை சந்தித்தவர் தானே கருணாநிதி?

அறிவாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்து போய் கீழ் மாடியில் 63 நாயன்மார்களை கொடுக்கிறேன் என்று கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை?

ADVERTISEMENT

தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, மக்கள் எக்கேடாய் போனால் என்ன? என்று டெல்லியில் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தவர் தானே நீங்கள் ? நீங்கள் எல்லாம் அடுத்தவர்களைப் பார்த்து பேச ஏதாவது அருகதை இருக்கிறதா?

அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் நேரில் வந்து விருந்தில் பங்கேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோதெல்லாம் ஸ்டாலின் கோமாவில் இருந்தாரா என்ன ?

எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் பரஸ்பர நல்ல நட்போடு, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

“டெல்லியின் சம்மதம் பெற்று” என்று ஸ்டாலின் சொல்வாரானால்,“ஸ்டாலின் வீட்டிற்கு வந்த ப.சிதம்பரம், UPA ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களை காட்டி மிரட்டியதில் பணிந்து தான் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணியை உறுதி செய்தது” என்று நாங்கள் சொல்லலாமா?

ஸ்டாலின் பேசுவதை எல்லாம் பார்த்தால் ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது…

ஒருவன் சந்தையில் ஒரு குதிரையை வாங்கினான். குதிரையை விற்றவன் “இது அற்புதமான குதிரை. ஓடும் நீரைக் கூட வேகமாக கடந்து சென்று கரையைத் தொடும்” என்றான். அந்த வியாபாரி பேச்சை நம்பி குதிரையை வாங்கி , நீரில் விட்ட பிறகே தெரிந்தது, அது மண் குதிரை என்று. மண் குதிரை கரைந்துவிட, நல்வாய்ப்பாக நீச்சல் தெரிந்ததால் எப்படியோ தப்பித்து வந்தான். தப்பித்து வந்த கையோடு , நனைந்து கொண்டே கோபத்தின் உச்சியில் சந்தைக்கு சென்ற அவனைப் பார்த்து அந்த வியாபாரி , “இன்னொரு குதிரை வேண்டுமா?” என்று கேட்டானாம்.

அந்த வியாபாரி போல தான் மு.க.ஸ்டாலின். இவர் சொன்ன விடியல் என்ற வார்த்தையை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி, மண் குதிரை ஆட்சியை கொடுத்துவிட்டு, மக்களை நட்டாற்றில் தத்தளிக்க விட்டது போதாது என்று, மீண்டும் அதே குதிரையை 2.0 என கூறி கூவி கூவி விற்கப் பார்க்கிறார்.

ஐயோ… தமிழக மக்கள் பாவமில்லையா ?” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel