அதிமுக – பாஜக கூட்டணியை ஸ்டாலின் விமர்சிப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். minister nirmala sitharama criticize mk stalin
சென்னை சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் இன்று (மே 2), சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறை செய்யப்பட்ட பிறகுதான் தமிழ்நாட்டில் இருந்து இன்னும் சில பிரிவு மாணவர்களுக்கு குடிமைப் பணிகளில் வாய்ப்பு கிடைத்தது. 1950 முதல் 2011 வரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் 600 பேர்தான் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வாகி இருந்தனர். ஆனால், 2011 முதல் தற்போது வரை 900க்கும் மேல் தேர்வாகியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஜிஎஸ்டி வரி குறித்து நான் தன்னிச்சையாக முடிவு செய்யவில்லை. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நிதி அமைச்சர்கள் வருவார்கள். அவர்கள் அனைவருடன் அமர்ந்து பேசிதான் முடிவெடுக்கப்படும். அதை தவிர்த்து ஜிஎஸ்டி வரி – மோடி தனியாக மக்களுக்கு வரி விதிப்பது போல் பேசப்படுகிறது. அது தவறு.
ஜிஎஸ்டிக்கு பிறகு தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள் மீது வரி விதிக்கப்படுகிறது என கூறுவது தவறு. ஜிஎஸ்டிக்கு முன்பு இருந்ததை விட தற்போது வரி குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும் திமுகவை தாக்கி பேசிய நிர்மலா சீதாராமன், “சமத்துவம் என சொல்லும் திமுக சாதிக்கு வெற்றியை தேடுவதா? மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை எங்களின் வெற்றி என திமுக சொல்வதா?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது… வட மாநிலங்கள் முன்னேறவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் குறிப்பிடும் வட மாநிலங்களில் கூட குடிக்கிற நீரில் மலத்தை யாரும் கலக்கவில்லை என்று வேங்கைவயல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார்.
மேலும் அவர், “கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்காக பணம் கொடுத்திருக்கிறோம். அதற்காக இங்கு ஆளும் கட்சியில் இருக்கக் கூடியவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து மெசேஜ் அனுப்புகிறார்கள். ஆனால் பப்ளிக்காக வேறுவிதமாக பேசுகிறார்கள். நீங்கள் புரிந்துகொண்டால் சரிதான்” என குறிப்பிட்டார்.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “ஊழல் செய்து, உச்ச நீதிமன்ற கண்டனத்துக்கு உள்ளாகி அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் ஆட்சி நடத்துகிற முதல்வர் எங்கள் கூட்டணி குறித்து பேசுவதை பற்றி என்ன சொல்வது. எனக்கு சிரிப்புதான் வருகிறது” என்று விமர்சித்தார். minister nirmala sitharama criticize mk stalin