இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு கிளவுட் சேவை விரிவிக்காக்கத்துக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் தனது மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது. இது ஆசியாவிலேயே மிக அதிகமான முதலீடாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 17.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யப்போவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாடெல்லா தெரிவித்துள்ளார். இந்த முதலீடு இந்தியாவின் டிஜிட்டல் கனவுகளுக்கு வலுசேர்க்கும் என்றும், நாட்டின் செயற்கை நுண்ணறிவு (AI) துறையை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, சத்யா நாடெல்லா சமூக வலைத்தளமான X-ல், “இந்தியாவின் AI வாய்ப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அளித்த உத்வேகம் தரும் பேச்சுக்கு நன்றி. நாட்டின் லட்சியங்களுக்கு ஆதரவளிக்க எங்களுடைய மைக்ரோசாப்ட் நிறுவனம் 17.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலீடாகும். இது தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்க உதவும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த முதலீட்டின் முக்கிய நோக்கங்கள் பல உள்ளன. இந்தியாவில், பெங்களூரு உட்பட புதிய அதிநவீன டேட்டா சென்டர்களை கட்டுவது இதில் முக்கியமானது. டேட்டா சென்டர்கள் என்பவை கணினிகள் மற்றும் சேமிப்பு சாதனங்களை அதிக அளவில் வைத்து இணைய சேவைகளை வழங்குவதற்கான பெரிய கட்டிடங்கள் ஆகும். மேலும், கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் இந்த முதலீடு உதவும்.
கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு AI திறன்களைப் பயிற்றுவிப்பதும் இந்த முதலீட்டின் ஒரு பகுதியாகும். இந்த முதலீட்டின் மூலம், மைக்ரோசாப்ட் இந்தியாவில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கிளவுட் உள்கட்டமைப்பை இது மேலும் விரிவுபடுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முதலீட்டில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மைக்ரோசாப்ட் இந்தியாவில் 20 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
இந்த 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடு, உலக AI வரைபடத்தில் இந்தியாவை ஒரு முக்கிய சக்தியாக நிலைநிறுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த முதலீடு, பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ (தற்சார்பு இந்தியா) திட்டங்களுக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்றும், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் துரிதப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
