மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, நமக்கு கிடைத்த வெற்றி என்றோ பின்னடைவு என்றோ கூற முடியாது என அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு, மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்திருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பிஆர் கவாய், நீதிபதிகள் வினோத் சந்திரன், அஞ்சாரியா பெஞ்ச் நேற்று பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் மனு ப்ரீ மெச்சூராக உள்ளது; மேகதாது அணை திட்ட அறிக்கையை கர்நாடகா தயாரித்தாலும் அதனை பரிசீலனை செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று ஆகியவற்றின் முன் நிபந்தனையும் அவசியம்.
மேகதாது அணைக்கான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் அப்போது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கையை முன்னெடுக்கலாம். தற்போது தமிழக அரசின் மனு உரிய நேரத்துக்கு முன்னராகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இது தொடர்பான அனைத்து மனுக்களையும் முடித்து வைத்து தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்திருந்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தமிழ்நாட்டுக்கு மிகப் பெரும் பின்னடைவு; காவிரியில் கர்நாடகா மேகதாது அணையை உடனே கட்ட போகிறது என தமிழக எதிர்க்கட்சிகள், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் இந்த உத்தரவு குறித்து கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது நமக்கு வெற்றி அல்லது பின்னடைவு என்று கூற முடியாது.
ஆனால் கர்நாடகாவுக்கு நீதி கிடைத்துள்ளது. மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கும்தான் பலன். கர்நாடகா மண்ணில் கர்நாடகா நிதியில் கட்டப்படுவதுதான் மேகதாது அணை. இதற்கு தமிழ்நாடு அரசும் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
