2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் இன்று (ஜூன் 29) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது.
பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். mdmk passed resolution to continue in dmk alliance
நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் : 1
ஈரோட்டில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற மதிமுக 31 ஆவது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தின்படி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், மதிமுக எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது என்று நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 2
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்டிராவை உருவாக்க முனைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் செயல் திட்டங்களை ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.
தீர்மானம் : 3
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
தீர்மானம் : 4
மதுரையில் ஜூன் 22ஆம் தேதி இந்துத்துவ அமைப்புகள் முன்னின்று நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்கக் கோட்பாடுகளை இழிவு படுத்தியும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெறச் செய்ததற்கு மதிமுக நிர்வாகக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 5
அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநில மாநாடு செப்டம்பர் 15 அன்று திருச்சியில் நடத்துவது என பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஜூலை 17ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கும் மண்டல வாரியான செயல்வீரர்கள் கூட்டங்களை திட்டமிட்டு சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டக் கழகங்கள் முனைந்து செயலாற்ற வேண்டும்.
தீர்மானம் : 6
தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது; அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கழக நிர்வாக் குழு வலியுறுத்துகிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 24-ஆம் தேதி மதிமுகவின் வேட்பாளராக 2021-ம் ஆண்டு பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதனால் திமுக – மதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்தசூழலில் இன்று நடைபெற்றுள்ள மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்ந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.