திமுகவில் இணைக்கப்படும் நிர்வாகிகள்- சென்னையில் இன்று மதிமுக நிர்வாக குழு கூட்டம்!

Published On:

| By Minnambalam Desk

MDMK Vaiko

மதிமுகவின் நிர்வாகிகள் திமுகவில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெறுகிறது. MDMK Vaiko

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடருவதாக மதிமுக அறிவித்துள்ளது. மேலும் திமுக கூட்டணியில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து மதிமுக வலியுறுத்தி வருகிறது.

அண்மையில் ஈரோட்டில் மதிமுகவின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் உள்ளிட்டோர் திமுக தலைமையை மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருந்தனர். இந்த பொதுக்குழுக் கூட்டம் முடிந்த உடனேயே, 2021-ல் பல்லடம் தொகுதியில் மதிமுகவின் வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துரத்தினம் உள்ளிட்டோர் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம் பெற்றிருப்பதால் அக்கட்சியின் அதிருப்தியாளர்களை திமுக தமது கட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக சேர்க்காமல் இருந்து வந்தது. தற்போது மதிமுகவின் அதிருப்தியாளர்களை திமுக இணைத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது.

இந்த அரசியல் சூழ்நிலையில் சென்னையில் மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share