சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’. டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்த இப்படத்தில் ‘பிரேமலு’ நஸ்லென், சந்து சலீம்குமார், அருண் குரியன் உள்ளிட்ட பலருடன் முக்கியப் பாத்திரத்தில் சாண்டி மாஸ்டரும் நடித்திருந்தார். சுமார் 30 கோடியில் தயாரான இப்படம் உலகம் முழுக்க இதுவரை கிட்டத்தட்ட 252 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.
ஒரு திரைப்படம் வெற்றியடைந்த பின்னர், சம்பந்தப்படாதவர்கள் கூட அதன் புகழ் பாடுவதுதான் வழக்கம். அது திரையை எட்டுவதற்கு முன்பான நிலைமை வேறாகத்தான் இருந்திருக்கும். அதனை மெய்ப்பித்திருக்கிறது தயாரிப்பாளர் துல்கர் சல்மானின் வார்த்தைகள்.
‘லோகா பட்ஜெட் பற்றி அப்பா (மம்முட்டி) ரொம்பவே கவலைப்பட்டார்’ என்று ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
”இவ்ளோ பெரிய ரிஸ்க் தேவைதானா என்று கல்யாணியின் அப்பா இயக்குனர் பிரியதர்ஷன் கூட என்னிடம் கேட்டார். ஆனால், படம் வெற்றியடைந்த பிறகு இருவருமே ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள்” என்று கூறியிருக்கிறார் துல்கர்.
’லோகா’ படத்தில் மூத்தோன் பாத்திரத்தில் மம்முட்டியை ஒரு ஷாட் மட்டும் காட்டியிருப்பார்கள். அதுவும் முகம் தெளிவுறக் காட்டப்பட்டிருக்காது.
அந்த பாத்திரத்தில் நடிக்க மம்முட்டி ரொம்பவே யோசித்ததாகச் சொல்லியிருக்கிறார் துல்கர்.
”சேஃப்டர் 1 ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா, ரெண்டாவது பார்ட்டும் நல்லாயிருந்தா மட்டும்தான், அதற்கடுத்த பார்ட்ல நான் நடிப்பேன்னு சொல்லியிருக்கார் அப்பா.
அதனால, அவர் ‘யெஸ்’ சொல்ற அளவுக்கு அடுத்த பாகத்தைச் சிறப்பாகத் தரணும்னு உழைப்போம். அவர் என்னோட அப்பாங்கறதால மட்டும் இதைச் சொல்லலை” என்று அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
சரிதானே, மம்முட்டி என்ற ஜாம்பவான் ‘ஜூனியர்கள்’ மத்தியில் நடிப்பதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் அல்லவா?