மகாராஷ்டிரா மாநில தொடக்கப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட இருந்த மும்மொழித் திட்டத்தை திரும்பப் பெறுவதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். Maharashtra Anti-Hindi Protest
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி மொழியைத் திணிக்கும் வகையில் 2 அரசாணைகளை வெளியிட்டது அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி
- ஏப்ரல் 16-ந் தேதி வெளியிட்ட அரசாணையில், மகாராஷ்டிராவில் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 3-வது மொழியாக இந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
- இதனையடுத்து ஜூன் 17-ந் தேதி மற்றொரு அரசாணையை வெளியிட்டது மகாராஷ்டிரா அரசு. அதில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி 3-வது பொது மொழியாக இருக்கும்; 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தி அல்லாமல் வேறு ஒரு இந்திய மொழியை கற்க விரும்பினால் கற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணையும் இந்தி மொழியை மறைமுகமாக திணிக்கும் நடவடிக்கைதான் என எதிர்ப்பு கிளம்பியது.
மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை அழித்து இந்தி மொழியைத் திணிக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே இருவரும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கூட்டாக ஜூலை 5-ந் தேதி போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்தனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பின்னணியில் தற்போது, இந்தி மொழியை 3-வது பாடமாக திணிக்கும் மும்மொழித் திட்ட அரசாணையையும் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன.