புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை மூன்றாவது நாளாக இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது.
அப்போது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘2023 செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 2023 முதல் தற்போது வரை ஒவ்வொரு மகளிருக்கும் 26 ஆயிரம் ரூபாய் நம்முடைய அரசால் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகம் வரும் நவம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வருவாய்த்துறை மூலம் கள ஆய்வு செய்யப்பட உள்ளன.
இந்தப் பணி நவம்பர் 30க்குள் நிறைவு பெற்று தகுதியான பெண்களுக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார் என்று கூறினார்.