மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கியத் திட்டமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 21) திறந்து வைத்தார்.
மதுரையின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் வகையில், வைகை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஆல்பர்ட் விக்டர் பாலம் உள்ளது. இந்நிலையில் அதற்கு இணையாக தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை சுமார் 1.3 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.213.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 21) தொடங்கி வைத்தார்.

இந்த பாலத்துக்கு விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவை போற்றும் வகையில் இந்த பாலத்துக்கு அவர் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டியுள்ளார்.
இந்தப் பாலம் 61 தூண்கள், 62 கண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டதன் மூலம் கோரிப்பாளையம், யானைக்கல், தமுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உச்ச நேரங்களில் நீண்ட நேரம் வாகனங்கள் நின்று செல்லும் நிலை இனி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் Pinnacle Infotech நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பொறியியல் மையத்தையும், மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கணினி ஆய்வகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சிவகங்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்கள் சிலையையும் முதல்வர் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
