ADVERTISEMENT

தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் : விஜய்

Published On:

| By Kavi

பள்ளிக்குழந்தைகள், கர்ப்பிணிகள் மதுரை மாநாட்டை நேரலை கண்டு மகிழுமாறு தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

தவெகவின் இரண்டாவது மாநாடு வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரையில் இருந்து அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தவெக தலைவர் விஜய் இன்று (ஆகஸ்ட் 18) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட, புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ, இன்னும் சில மாதங்களே உள்ளன.

ADVERTISEMENT

1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம்.

தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், தவெக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் தவெக தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.

மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி” என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்.

உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன். உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share