திருச்செந்தூர் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (அக்டோபர் 20) கேள்விகளை எழுப்பியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விஐபி தரிசனத்திற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக பக்தர்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் பட்டர்கள் 11 பேர், கைங்கர்யங்களை செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதிக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “திருச்செந்தூர் கோவில் உள்ள திரி சுதந்திர சபை, பட்டர்கள் ஆகியோருக்குள் ஏற்படும் பிரச்சனையால் பக்தர்கள் தரிசனம் செய்வதில் நீண்ட நேர தாமதம் ஏற்படுகிறது” என வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, “திருச்செந்தூர் கோவிலில் கடிகாரம் சுற்றும் திசையில் ஆகமவிதிப்படி தரிசனம் செய்வதற்கு வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
நீண்ட வரிசையில் காத்திருக்காமல் தாமதமின்றி வழிபட என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
விஐபி தரிசனத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா? விவிஐபி தரிசனத்தின்போது சாதாரண வரிசையில் வரும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்களா?” என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து இந்த கேள்விகளுக்கெல்லாம் கோவில் இணை ஆணையர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
