தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 8 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் இன்று (அக்டோபர் 21) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய மழை நிலவரம்!
தமிழகத்தை பொறுத்தவரை நாளை (அக்டோபர் 22) சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ஆகிய 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் வரும் 23ஆம் தேதி சென்னை திருவள்ளூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
