மதுரை மாநாட்டுக்கான பணிகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில், ஆகஸ்ட் 21ஆம் தேதி வியாழக்கிழமை மாநாடு நடைபெறும் என்றும் அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் விஜய் அழைப்பு விடுத்தார்.
சட்டமன்றத் தேர்தலை தமிழகம் சந்திக்கவுள்ள நிலையில், விஜய் மாநாடு நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டி மாநாட்டைக் காட்டிலும், மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்த தவெகவினர் திட்டமிட்டுள்ளனர்.

சுமார் 506 ஏக்கரில் பார்க்கிங் அமைப்பது, மேடை அமைப்பது, நிழல்கூடம், மருத்துவ வசதி, பந்தல் அமைத்தல், தண்ணீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கான பணி நடந்து வருகிறது.
இன்னும் மாநாட்டுக்கு ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், நேற்று எல்.இ.டி பிரச்சார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
இன்று (ஆகஸ்ட் 15) மாநாடு நடைபெறும் இடத்துக்கு தண்ணீர் பாட்டில்கள் வந்து அடிக்கி வைக்கப்பட்டன. விக்கிரவாண்டி மாநாட்டில் தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை மாநாட்டுக்காக சுமார் 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த தண்ணீர் பாட்டில்களில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

இப்படி மாநாட்டுக்கான பணிகள் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், அக்கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கோயில்கள், தேவாலயங்களில் மாநாடு வெற்றி பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 15) தவெக தொண்டர்கள் வேளாங்கண்ணியில் மும்மத பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மாநாடு வெற்றி பெற வேண்டியும், 2026ல் விஜய் முதல்வராக வேண்டியும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

நாகை மாவட்ட செயலாளார் சுகுமாறன் தலைமையில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து நாகூர் தர்காவிலும், நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலிலும் வழிபட்டனர்.

இன்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், மதுரை தெற்கு தொகுதி, தெற்கு வாசல் பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார். பின்னர், இஸ்லாமிய மக்களுக்கு மாநாட்டின் துண்டுப் பிரசுரங்களை வழங்கி அழைப்பு விடுத்தார்.
நேற்று (ஆகஸ்ட் 14) தங்கத்தேர் இழுத்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபாடு செய்தார்.

இந்தசூழலில் மாநாட்டிற்காக மேடை ஒருங்கிணைப்புக் குழு, மாநில தலைமை ஒருங்கிணைப்பு குழு, அமைப்பு குழு, தீர்மான குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு என 5 குழுக்களை அமைத்துள்ளது தவெக தலைமை. அதன் நிர்வாகிகள் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.
