தென் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் திருவிழாவான மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா தென் தமிழ்நாட்டு மாவட்டங்களின் முக்கியமான ஆன்மீக நிகழ்வு. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் பெருந்திரளாக பக்தர்கள் குவிந்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்ட நிகழ்விலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல். இதற்காக கள்ளழகர், அழகர்மலை கோவிலில் இருந்து கண்டாங்கி பட்டு உடுத்தி நேற்று மாலை மதுரை நோக்கி புறப்பட்டார். 18 கிமீ தொலைவில் உள்ள மதுரை நோக்கி வரும் கள்ளழகர் பல்லக்குக்கு வழிநெடுக பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இன்று அதிகாலை மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு திருமஞ்சனம் எனும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக வைகை அணையில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் திறந்துவிடப்பட நீர், மதுரையை வந்தடைந்தது.
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.