மெட்ராஸ் மேட்னி: விமர்சனம்!

Published On:

| By Minnambalam Desk

Madras Matinee Movie Review

வாழ்வு எனும் சாகசம்! Madras Matinee Movie Review

’மிடில் கிளாஸ் லைஃப்ல அட்வெஞ்சர் எங்க இருக்கு’ என்ற கேள்வியைத் தாங்கி வந்த ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ட்ரெய்லர் ஈர்ப்பைத் தருவதாக இருந்தது. சத்யராஜ் தொடங்கி காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்ரியன், விஸ்வா, ஜார்ஜ் மரியான், சாம்ஸ் என்று இப்படத்தின் காஸ்ட்டிங் வழக்கத்தில் இருந்து வேறுபட்டிருந்தது. இப்படம் சுவாரஸ்யமான திரையனுபவத்தைத் தரும் என்கிற உத்தரவாதத்தைத் தந்தது.

கார்த்திகேயன் மணி இயக்கத்தில், கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் உண்மையிலேயே அப்படியொரு அனுபவத்தைத் தருகிறதா?

அடித்தட்டு வாழ்க்கை! Madras Matinee Movie Review

Madras Matinee Movie Review

ஆட்டோ ஒட்டுகிற ஒரு மனிதர் தனது மனைவி, மகள், மகனுடன் வாழ்கிறார். தங்களை விட்டு மறைந்த தாயின் புகைப்படத்தைத் தினமும் வணங்கிவிட்டு வேலைக்குச் செல்கிற மனிதர் அவர். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இல்லாதவர். அதேநேரத்தில், தான் வாழ்கிற சமூகத்தில் தன்னைவிட வயதிலும் அந்தஸ்திலும் அதிகமானவர்களிடம் அடங்கிச் செல்பவர். இது அவரது மகளுக்கும் மகனுக்கும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஐடி நிறுவனமொன்றில் பார்க்கும் வேலைக்காகத் தனியே பெங்களூருவில் தங்கியிருக்கிறார் மகள். அங்கிருந்தவாறே ‘மேட்ரிமோனியல்’ தளம் வழியே தனக்கான மணமகனைத் தேடுகிற முயற்சியில் இருக்கிறார். Madras Matinee Movie Review

பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி செல்லும் தருவாயில் இருக்கிற மகனுக்கோ, தனது கல்விக்காக வங்கிக்கடன் கேட்டுப் பல பேரின் பின்னால் தந்தை அலைவது பிடிக்கவில்லை.

ஒருநாள் மகன், மகள் இருவருமே அடுத்தடுத்து அந்த தந்தையிடம் ‘அமிலத்தில்’ தோய்த்தது போன்ற வார்த்தைகளைக் கொட்டுகின்றனர். ‘பிள்ளைகளின் நலனே பிரதானம்’ என்றிருக்கும் அந்த தந்தையால் அதனைத் தாங்க முடிந்ததா? அதன் விளைவுகள் என்னவாக இருந்தன என்பதைச் சொல்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’.

இந்தக் கதையை நாவலாசிரியராக வரும் ஒரு பாத்திரம் விவரிப்பதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சாதாரண வாழ்வை மேற்கொள்கிற சில அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்து மனிதர்களையும் அவர்களது இயல்பையும் காட்டிய வகையில் வேறுபட்ட அனுபவத்தைத் தருகிறது இப்படம். Madras Matinee Movie Review

இதன் கதை சொல்லல் நேர்கோடாக இல்லாமல் ‘நான்லீனியர்’ பாணியில் அமைந்திருக்கிறது. அது பாத்திரங்கள் வெளிப்படுத்துகிற உணர்வுகளைக் கலைத்துப் போடுகிறது. Madras Matinee Movie Review

தேவையற்ற இடங்களில் வருகிற டீட்டெய்ல், கதை சொல்லலை அலங்காரப்படுத்துகிற வகையில் அமைந்த சில நுட்பங்கள் ‘அதீதமாகி’ நம்மை ‘ப்பா..’ என்று சொல்ல வைக்கின்றன. Madras Matinee Movie Review

அதேநேரத்தில், காட்சிகளில் இருக்கிற யதார்த்தமும் ரசிகர்களின் வாழ்வோடு பொருந்திப் போகிற நிகழ்வுகளும் படத்தோடு ஒன்ற வைக்கின்றன.

Madras Matinee Movie Review

சிறப்பான ‘காஸ்ட்டிங்’! Madras Matinee Movie Review

இந்த படத்தில் ஜோதி ராமையா எனும் பாத்திரத்தில் கதை சொல்லியாக வருகிறார் சத்யராஜ். அவரது நடிப்பைத் தனியே புகழ வேண்டியதில்லை. என்ன, அவரது பாத்திரத்தின் பின்னணியை, அது வாழ்கிற சூழலை இன்னும் விரிவாகக் காட்டியிருக்கலாம்.

அந்த பாத்திரத்தையே முற்றிலுமாகத் தவிர்த்து, இயக்குனரின் வாய்ஸ் ஓவரில் கூட இக்கதையை விவரித்திருக்கலாம். என்ன இருந்தாலும், இயக்குனரின் சுதந்திரத்தில் தலையிடுவது சரியல்ல என்பதால் இதோடு இதனை நிறுத்திக் கொள்ளலாம்.

கதை நாயகனாக வரும் காளி வெங்கட், ‘மாப்பிள்ளை பார்க்கச் சென்ற மகள் என்ன சொன்னார்’ என்று மனைவியிடம் கேட்கிற காட்சியில் வசனம் பேசாமல் தடுமாறுகிற இடம் அவரது நடிப்புக்கான ஒரு சோறு பதம். இப்படம் அவருக்கான இடத்தை ஒருபடி மேலேற்றியிருக்கிறது.

அதிகம் பேசாமல், ஒரு சாதாரண ‘ஹோம் மேக்கர்’ ஆகவே திரையில் தோன்றியிருக்கிறார் ஷெல்லி. அப்பாத்திரத்தின் தன்மையை அப்படியே நாம் உணருமாறு செய்திருக்கிறார்.

ரோஷினி ஹரிப்ரியனுக்கு அதிகக் காட்சிகள் இல்லை. ஆனால், தான் வருகிற இடங்களில் சுயமாகக் கல்வி, பணியில் முன்னேறிய ஒரு பெண்ணை முன்னிறுத்துகிறார்.

விஸ்வாவுக்கு இதில் அலட்சியமும் அறியாமையும் கொண்ட ஒரு வாலிபரின் பாத்திரம். அதனைச் சரியாகத் திரையில் பிரதிபலித்திருக்கிறார்.

Madras Matinee Movie Review

இவர்களோடு சாம்ஸ், ஜார்ஜ் மரியான், விஜய் டிவி ராமர், கீதா கைலாசம், சுனில் சுகாதா, மதுமிதா, அர்ச்சனா மற்றும் வினோத், கெய்ல், வட்டிக்கடை சேட் பாத்திரங்களில் நடித்தவர்கள் உட்பட ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

அந்த வகையில் இதன் ‘காஸ்ட்டிங்’ வேறுபட்டதாகவும் சிறப்புமிக்கதாகவும் உள்ளது.

கலை இயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி.கே. ஆகியோர் திரையில் வரும் பிம்பங்களை யதார்த்தம் என்று உணரச் செய்திருக்கின்றனர்.

படத்தொகுப்பாளர் சதீஷ் குமார் சமுஸ்கி, இயக்குனர் கார்த்திகேயன் மணி இக்கதையைத் திரையில் சொல்ல முயன்றிருக்கும் பாணிக்குத் துணை நின்றிருக்கிறார்.

சமகாலக் காட்சிகளுக்கு அறுபதுகளில் வருகிற ‘கமர்ஷியல் பட இசையை’ பின்னணியாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன். அந்த உத்தி சுவாரஸ்யம் தருகிறது. Madras Matinee Movie Review

போலவே ‘என்னடா பொழப்பு இது’, ’உசுரே உன்னை தானே’ பாடல்களை ஈர்ப்பை ஏற்படுத்துகிற வகையில் தந்திருக்கிறார்.

இன்னும் ஒலிப்பதிவு வடிவமைப்பாளர் ஆண்டனி ரூபன், ஆடை வடிவமைப்பாளர் நந்தினி நெடுமாறன், ஒப்பனையாளர் காளிமுத்து எனப் பலரது உழைப்பு இதில் கலந்திருக்கிறது.

படம் முழுக்க வண்ணக் கலவையின் வீரியத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிற டிஐ மற்றும் காட்சி விவரிப்புக்கு ஏற்ற விஎஃப்எக்ஸ் தரம் ஈர்க்கின்றன.

இப்படத்தில் பல காட்சிகள் நேரடியாக நமக்கு எதையும் சொல்வதில்லை. முக்கியமான சில விஷயங்களைப் பூடகமாக உணர்த்துகின்றன. அதற்கான வசனங்கள் கூட, ‘ஈட்டி தைத்தாற் போல’ நேரடியாக நம்மை நோக்கிப் பாய்வதில்லை.

அந்த வகையில், இயக்குனரின் திரைக்கதை ட்ரீட்மெண்ட் பல இடங்களில் நம்மைச் சோர்வடைய வைக்கிறது.

மின்வாரிய அலுவலகத்தில் தந்தை புகார் கொடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது என்று மகனாக வரும் விஸ்வா பாத்திரம் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்க, ‘நானும் கண்ணன் சாரும் எத்தனை தடவை இங்க மனு கொடுத்திருக்கோம் தெரியுமா’ என்று ராமர் பாத்திரம் சொல்லுமிடம், அந்த முரண் சரி செய்யப்பட்டிருப்பதை உணர்த்தும் வகையில் அடிக்கோட்டிட்டுக் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இயக்குனர் அதனைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.

Madras Matinee Movie Review

இந்த அணுகுமுறை சில ரசிகர்களுக்கு அதிருப்தியைத் தரலாம். ஏனென்றால், நிறைய நகைச்சுவை, சோகக் காட்சிகள் அவ்வாறு சட்டென்று நம்மைக் கடந்துவிடுகின்றன.

அது போக, சில பாத்திரங்களின் விவரிப்பு போதுமானதாக இல்லை. சத்யராஜ், ரோஷினியைப் பெண் பார்க்க வரும் நபர், வினோத், கெய்ல் மற்றும் பச்சோந்தி பிரேமா எனச் சில பாத்திரங்கள் ஆங்காங்கே தலை நீட்டுகிறபோது, அவற்றின் பின்னணி குறித்த கேள்வி எழுகிறது.

அனைத்தையும் தாண்டி, குறைகளைப் புறந்தள்ளுகிற அளவுக்கு ‘மெட்ராஸ் மேட்னி’ வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தைத் தருவதை மறுக்க முடியாது. என்ன, அந்த குறைகளைச் சரிப்படுத்தியிருந்தால் ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற ‘பெர்பெக்ட் பேமிலி எண்டர்டெயினர்’ வரிசையில் இப்படம் சேர்ந்திருக்கும். அது ‘மிஸ்’ ஆகியிருப்பது உண்மை என்றபோதும், இது போன்ற கதை சொல்லல் பாணி புதிய அனுபவம் தருவதை ரசிகர்கள் ‘மிஸ்’ செய்யத் தேவையில்லை.

இதுவரை நாம் காணாத மனிதர்களை, களங்களை, வாழ்வைத் திரையில் காண அது துணை நிற்கும்.

‘மிடில் கிளாஸ் மக்களின் வாழ்வில் சாகசம் என்பது சில நிகழ்வுகளில் அடங்குவதாக இல்லை. அது, அவர்களது ஒட்டுமொத்த வாழ்வின் சாராம்சமாக உள்ளது’ என்று சொன்ன வகையில் தனித்துவமானதாகத் தோற்றம் தருகிறது ‘மெட்ராஸ் மேட்னி’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share