ஆர்ஜே பாலாஜியை நாயகனாகக் கொண்டு ‘ரன் பேபி ரன்’ தந்தவர் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார். ரொம்பவே சீரியசான கதை சொல்லலைக் கொண்ட அந்த படம் லேசாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த இயக்குனருடன் நாயகன் ஆர்யா கைகோர்த்திருக்கிறார் என்றபோது, சிறிதாக எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. is ananthan kaadu aryas political drama
ஆர்யா நடிக்கும் இப்படத்தின் பெயர் ‘அனந்தன் காடு’. இந்த டைட்டில் உடன் ’To the jungles with in’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
’மகாராஜா’ பட இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
‘லூசிஃபர்’, ‘எல்2:எம்புரான்’ படங்களுக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதிய முரளி கோபி, இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.
டீசரை பார்த்தால், அவர் எழுதிய ’லெப்ட் ரைட் லெப்ட்’, ‘தியான்’, ‘கம்மார சம்பவம்’ படங்கள் கண் முன்னே வந்து போகின்றன. இடதுசாரி தத்துவங்களை ஏந்தி வந்த அப்படங்களில் கமர்ஷியல் படங்களுக்குரிய சில அம்சங்கள் வித்தியாசமான விகிதாச்சாரத்தில் இடம்பெற்றிருந்தன.
அதனாலேயே, ‘அனந்தன் காடு’ குறித்த நேர்மறையான எதிர்பார்ப்புடன் கொஞ்சம் பயம், பதற்றம் மற்றும் இன்ன பிற உணர்வுகள் எட்டிப் பார்க்கின்றன.
முரளி கோபி இதில் பாடல் வேறு எழுதியிருப்பதாகச் சொல்கிறது டைட்டில் கார்டு.
புரட்சி, துப்பாக்கி, ரத்தம், அரசியல் சதுரங்கம் என்று நகரும் ‘அனந்தன் காடு’ டீசரில் ஒவ்வொரு ஷாட்டும் சில கலைஞர்களை காட்டுவதாக உள்ளது.
ரெஜினா கேசண்ட்ரா, நிகிலா விமல், சாந்தி பாலகிருஷ்ணன், விஜயராகவன், இந்திரன்ஸ், முரளி கோபி, அப்பானி சரத், அச்யுத்குமார், சுனில் என்று நீள்கிறது இதன் காஸ்ட்டிங். இன்னும் எத்தனை பிரபலங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பெரும்பாலான நடிகர் நடிகைகள் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பதால், இப்படம் மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் தயாராகிறதா அல்லது பான் இந்தியா படம் என எல்லா மொழிகளிலும் ஜல்லியடிக்கப் போகிறதா என்று தெரியவில்லை.
’ஆக்ஷன் பொலிடிகல் த்ரில்லர்’ ஆக ‘அனந்தன் காடு’ இருக்கக்கூடும் என்கிற எண்ணத்தை விதைக்கிறது இதன் டைட்டில் டீசர். இதனைக் கண்டவுடன், ‘அரசியல் கதையில் ஆர்யா’ என்ற தலைப்புகள் வரிசை கட்டத் தொடங்கும்..
மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம், சார்பட்டா பரம்பரை 2 ஆகியவற்றைக் கைவசம் வைத்திருக்கும் ஆர்யாவுக்கு இது 36வது படம்.
’திரையில் அரசியல் பேசுகிறேன் பேர்வழி’ என்று ரசிகர்களின் மண்டையைக் குழப்புகிற திரைப்படங்களுக்கு மத்தியில் ‘அனந்தன் காடு’ எப்படிப்பட்ட அனுபவத்தைத் தரும் என்று தெரியவில்லை.
’எப்படிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அதனைத் தெளிவாகச் சொன்னால் புரிந்து கொள்வோம்’ என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
’அனந்தன் காடு’ குழுவினர் தரும் அடுத்தடுத்த அப்டேட்களில் இருந்து கூட அதனைப் புரிந்து கொள்ள நேரிடலாம்..!