வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (அக்டோபர் 21) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நாளை அக்டோபர் 21ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் அக்டோபர் 23-க்குள் தென் மத்திய வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 26ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் தென் கடலோரப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்கள் வங்கக் கடலின் தென் மற்றும் மத்திய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
