வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையத்தின் அறிவிக்கையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என தெரிவித்துள்ளது.
மேலும் தென் வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வறண்ட வானிலை நிலவும். ஒருசில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், “இன்று (ஜனவரி 6) முதல் ஜனவரி 10 வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 6 முதல் ஜனவரி 10 வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3°C வரை படிப்படியாக குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இன்று இரவு/அதிகாலையில் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
