ரயில்களின் மீது கல் எறிபவர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓடும் ரயில்கள் மீது கல் எறிவது, ரயில் தண்டாவளத்தில் கற்கள் வைப்பது போன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்த கல் எறி சம்பவங்களால் சென்னை – மைசூர், சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்களின் ஜன்னல் கண்ணாடிகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த குற்றச்செயலை தடுக்கும் விதமாக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இதுதொடர்பாக ஈரோடு வாய்க்கால் மேட்டில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான ஆர்.பி.எப் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ரயில்கள் மீது கல் எறிவதாலும், தண்டவாளங்களில் கல் வைப்பதாலும் ஏற்படும் பாதிப்புக்களை குறும்படமாக வெளியிட்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அவர்கள் பேசுகையில், “பயணிகள், ரயில்வே பணியாளர்கள் மற்றும் ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதுபோன்ற நாச வேலைகளை இந்திய ரயில்வே மிகவும் தீவிரமாக கருதுகிறது.
இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது ரயில்வே சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். இத்தகைய குற்றவாளிகள் மீது ரயில்வே துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தீங்கு செய்யும் வகையில் ரயிலை சேதப்படுத்துதல் அல்லது சேதப்படுத்த முயற்சித்தல், ரயில் தண்டவாளத்தின் மீது கற்கள் அல்லது பிற பொருட்களை வீசுதல், தண்டவாளங்கள் இயந்திரங்கள் போன்றவற்றை சேதப்படுத்துதல், ரயில்வேயில் உள்ள நபர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை வழங்கப்படும்.
முதல்முறை குற்றம்புரிந்தவராக இருந்தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அடுத்த முறை செய்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் ரயில்வே சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் எதிர்கால வேலை வாய்ப்பு மோசமாக பாதிக்கப்படலாம்” என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.