மகாராஷ்டிராவில் இந்தியை ஒட்டி நடக்கும் விவாதத்தை முன்வைத்து
அனிருத்த மகாஜன் Language and Power
மகாராஷ்டிர மாநிலம் அண்மையில் மொழிப் புயலின் மையமாக மாறியது. மராத்தி, ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயம், மூன்றாவது மொழியாக்க மாநில அரசு எடுத்த முடிவு கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், சிவில் சமூகக் குழுக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஆகியவை இப்போராட்டங்களில் கலந்துகொண்டன. Language and Power
இந்தக் கொள்கையை அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டாலும், இச்சம்பவம் ஆழமான கவலையை வெளிப்படுத்தியது: இந்தியா தனது பன்மைத்துவ வேர்களிலிருந்து ஒற்றைப்படுத்தப்பட்ட தேசியக் கலாச்சாரத்தை நோக்கி நகர்கிறதா?
இந்த விவாதத்தின் மையத்தில் உள்ள கேள்வி என்னவென்றால், இந்தியாவின் வகுப்பறைகளிலும், அதன் மூலம் அதன் பொது வாழ்விலும் எந்த மொழிகள் முக்கியமானவை என்பதை யார் தீர்மானிப்பது என்பதுதான்.
இந்தக் கேள்வியை இதற்கு முன் இந்திய அரசியலமைப்பின் சிற்பி பி.ஆர். அம்பேத்கர், திராவிடத் தலைவர் பெரியார் ஈ.வே.ரா., இத்தாலியச் சிந்தனையாளர் அன்டோனியோ கிராம்ஷி ஆகியோரும் எழுப்பியிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் மொழி எவ்வாறு அடையாளம், ஜனநாயகம், அதிகாரத்துடன் தொடர்புடையது என்பது குறித்த நுட்பமான சிந்தனைகளை வழங்கியுள்ளனர். Language and Power
அம்பேத்கர் அறிந்தவை Language and Power

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பி.ஆர். அம்பேத்கர், தாய்மொழி வழிக் கல்விக்காக வலுவாக வாதிட்டார். 1949 செப்டம்பர் 2 அன்று அரசியல் நிர்ணய சபையில் பேசுகையில், ஒரு குழந்தையின் தாய்மொழியில் கல்வி கற்பது கல்வியியல் ரீதியாக மட்டுமல்லாமல், ஜனநாயகப் பங்கேற்புக்கு அத்தியாவசியமானது என்றும் கூறினார்.
இந்தக் கருத்து 2025ஆம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்ட “மொழிகளின் முக்கியத்துவம்: பன்மொழிக் கல்வி குறித்த உலகளாவிய வழிகாட்டுதல்” என்ற அறிக்கையிலும் எதிரொலிக்கிறது. குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் எவ்வாறு சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மகாராஷ்டிரத்தில் சுமார் 70% மக்களுக்கு மராத்தி தாய்மொழியாகும். அங்கு 1ஆம் வகுப்பு முதல் இந்தியைத் திணிப்பது, குறிப்பாகக் கிராமப்புற, விளிம்புநிலை மாணவர்கள் ஏற்கெனவே கல்வி பெற முடியாமல் இருக்கும் நிலையில், கற்றல் செயல்முறையைச் சீர்குலைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இந்தியை தேசிய மொழியாக்குவதற்கு எதிராகவும் அம்பேத்கர் எச்சரித்தார். 1949 செப்டம்பர் 14 அன்று நடந்த சூடான அரசியல் நிர்ணய சபை விவாதங்களின்போது, இந்தி பேசுபவர்கள் கணிசமான அளவில் இருந்தாலும், அவர்கள் இன்னும் “மக்கள்தொகையின் சிறுபான்மையினர்” என்று எச்சரித்தார். ஒரு மொழிக்கு மற்ற மொழிகளை விடச் சிறப்புரிமை அளிப்பது இந்தியாவின் பரந்த பகுதிகளை அந்நியப்படுத்தவும், அதன் கூட்டாட்சித் தன்மையைப் பிளவுபடுத்தவும் வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவரது பிற்கால எழுத்துக்களான, குறிப்பாக “மொழிரீதியான மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள் (1955)”, நிர்வாகத் திறனை உறுதிப்படுத்தவும், கலாச்சார சுயாட்சியைப் பாதுகாக்கவும் இந்திய மாநிலங்களை மொழிரீதியாக மறுசீரமைக்கும் யோசனையை ஆதரித்தன. மராத்தி பேசுபவர்களுக்கான தனி மாநிலத்தைக் கோரிய சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்திற்குப் பிறகு 1960இல் மகாராஷ்டிரா உருவானது இந்தக் கோட்பாட்டைப் பிரதிபலிக்கிறது. Language and Power
இன்று, பள்ளிகளில் கட்டாய இந்தி போன்ற கொள்கைகள், கடந்த கால மொழி இயக்கங்கள் கடினமாகப் போராடிப் பெற்ற பெருமையையும் கண்ணியத்தையும் பறித்துவிடும்.
தேசியக் கல்விக் கொள்கை 2020, பழைய மும்மொழி சூத்திரத்தை (முன்னர் 1966இல் கோத்தாரி ஆணையத்தால் முன்மொழியப்பட்டது) மீண்டும் உறுதிப்படுத்துகிறது: பிராந்திய மொழி, இந்தி அல்லது ஆங்கிலம், மூன்றாவது இந்திய மொழி. ஏட்டளவில் இது நியாயமானதாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் இது இந்தி பேசாத மாநிலங்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு பல ஆண்டுகளாக இந்த சூத்திரத்தை நிராகரித்து, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாகத் தனது இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைபிடித்துவருகிறது.
இந்தி பேசும் மாநிலங்கள் பலவற்றில், பள்ளிகள் இந்தி அல்லாத எந்த இந்திய மொழியையும் உண்மையில் கற்பிப்பதில்லை. இதன் விளைவாகச் சமச்சீரற்ற நிலை உருவாகிறது: இந்தி அல்லாத மாநிலங்கள் இந்திக்கு இடமளிக்க வேண்டும், ஆனால் இந்தி பேசும் மாநிலங்கள் பிற மொழிக்கு இடமளிப்பதில்லை. இது அம்பேத்கரின் கூட்டுறவு அடிப்படையிலான கூட்டாட்சிக் கருத்துக்கு முரணானது. மொழிக் கொள்கை போன்ற கலாச்சார முடிவுகள் அனைவரது சம்மதத்துடனும் சூழலுக்கு ஏற்பவும் எடுக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கருத்து. Language and Power
எனவே மகாராஷ்டிரத்தில் இந்தக் கொள்கை திரும்பப் பெறப்பட்டது வெறும் அரசியல் ரீதியான சமாளிப்பு மட்டுமல்ல; கூட்டாட்சி சமநிலையை அது மறுஉறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கை (NEP) தெளிவற்றதாக இருக்கும்வரை கலாச்சார ஆதிக்கத்தின் ஆபத்து நீடிக்கும். Language and Power
பெரியார் எதற்கு எதிராகப் போராடினார் Language and Power

அம்பேத்கர் நிறுவனரீதியான பாதுகாப்புகளில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் தமிழர் தலைவர் பெரியார், மொழியியல் ஒடுக்குமுறைக்கு எதிராக நேரடிப் போர் தொடுத்தார். 1930களிலும் 1960களிலும் கட்டாய இந்தி கற்பித்தலுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெரியாரும் திராவிட இயக்கங்களும் போராட்டங்களை நடத்தினார்கள். Language and Power
கட்டாய இந்தி “மொழியியல் அடிமைத்தனத்திற்கு” வழிவகுக்கும் என்று பெரியார் எச்சரித்தார். அவரது பயம் கற்பனையானது அல்ல. தமிழர்கள் தங்கள் மொழி, இலக்கியம், அடையாளம் ஆகியவை இந்தியை மையமாகக் கொண்ட தேசியவாதத்தால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டனர்.
பெரியாரின் விமர்சனம் இன்று மகாராஷ்டிரத்தில் எதிரொலிக்கிறது. அங்குள்ள பலர் இந்திக்கான இந்த நகர்வை பிராந்திய அடையாளத்தையும் கலாச்சார சுயாட்சியையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாகக் கருதுகிறார்கள். Language and Power
அதிகாரத்தின் மொழி Language and Power

இத்தாலியத் தத்துவ ஞானியும் அரசியல் கோட்பாட்டாளருமான அன்டோனியோ கிராம்ஷி இந்தியா பற்றி ஒருபோதும் எழுதவில்லை, ஆனால் அவரது “கலாச்சார மேலாதிக்கம்” பற்றிய கோட்பாடு, சிக்கலான சமூகங்களில் மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. ஆதிக்கம் செலுத்தும் குழுக்கள் சட்டம் அல்லது வன்முறை மூலம் மட்டும் ஆட்சி செய்வதில்லை, மக்களின் “பொதுப்புத்தியை” அவர்கள் வடிவமைக்கிறார்கள். இந்தச் செயல்முறையில் மொழி மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும் என்று கிராம்ஷி கூறினார்.
விதர்பா அல்லது மராத்வாடா பகுதியைச் சேர்ந்த ஒரு மராத்தி பேசும் குழந்தை 1ஆம் வகுப்பு முதல் இந்தி கற்கிறது. ஆனால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைக்கு மராத்தி கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏதும் இல்லை. எனவே அந்தக் குழந்தைக்குக் கற்றல் என்பது ஒப்பீட்டளவில் எளிது. சில மொழிகள் (அவை சார்ந்த கலாச்சாரங்கள்) இதர மொழிகளை (கலாச்சாரங்களை) விட முக்கியமானவை என்ற கருத்து அந்தக் குழந்தையின் மனதில் இயல்பாகப் படிந்துவிடுகிறது.
ஆதிக்கம் மெல்ல மெல்லத் தன் வலையை விரிப்பது இப்படித்தான் நடக்கிறது. இது பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. இது எப்போதும் ஆணைகளால் வருவதில்லை. சில சமயங்களில் இது பாடத்திட்டச் சீர்திருத்தமாக வருகிறது.
மகாராஷ்டிரத்திற்கு அப்பால்

மகாராஷ்டிரச் சர்ச்சை தனித்தன்மை வாய்ந்ததோ தனிமைப்படுத்தப்பட்டதோ அல்ல. 2017இல், பெங்களூருவில் #நம்மமெட்ரோஇந்திபேடா பிரச்சாரம் நடந்தது, இது நகரத்தின் மெட்ரோ அமைப்பில் இந்திப் பெயர்ப் பலகைகளை எதிர்த்தது. தமிழ்நாட்டில், இந்தி எதிர்ப்பு தொடர்ந்து அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில், அறிவியல் நிறுவனங்களில் ‘இந்தி-மட்டுமே’ என்னும் கொள்கைகளை எதிர்த்து மாணவர்கள் போராடினர். பஞ்சாபில், பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகாரப்பூர்வமான தகவல்தொடர்புகளில் பஞ்சாபிக்கு மரியாதை கோரினர்.
மொழியியல் ரீதியாக மிகவும் மாறுபட்ட பிராந்தியமான வடகிழக்கும் எதிர்ப்பைத் தெரிவித்தது. 2022இல் மத்திய அரசு அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் 10ஆம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயமாக்கியது. இதைக் கலாச்சார அழிப்பு நடவடிக்கையாகக் கருதிய உள்ளூர்க் கலாச்சாரக் குழுக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்த ஒவ்வொரு இயக்கமும் ஆழமானதொரு போராட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. மையப்படுத்தப்பட்ட தேசிய அரசின் அமைப்பில் தனி மொழிகளின் அடையாளங்களைப் பாதுகாப்பது என்பதே அந்தப் போராட்டம்.
இந்தியாவின் வலிமை எந்த ஒரு மொழி அல்லது கலாச்சாரத்திலும் இல்லை. பலவற்றை ஒன்றாக வைத்திருக்கும் அதன் திறனில் உள்ளது. மொழி அதிகாரமளிக்கும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, விலக்குவதற்கானதல்ல என்று அம்பேத்கர் நமக்கு நினைவூட்டுகிறார். நிறுவனங்கள் தோல்வியடையும்போது எதிர்ப்பு அவசியம் என்பதை பெரியார் காட்டுகிறார். கொள்கையின் மேற்பரப்பிற்கு அடியில் பார்த்து, யார் பயனடைகிறார்கள் என்று கேட்க கிராம்ஷி நமக்குக் கற்றுத்தருகிறார்.
மகாராஷ்டிரச் சர்ச்சை மாநில அளவிலான கல்வித் தகராறு மட்டுமல்ல. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களை ஒன்றிணைக்க மொழியைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்த வேண்டுமா? அது நமது பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்க வேண்டுமா அல்லது அதை மீறிச் செல்ல வேண்டுமா? இதை யார் தீர்மானிப்பது?
கட்டுரையாளர் குறிப்பு:
அனிருத்த மகாஜன், இங்கிலாந்து, எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர். சாதி ஏற்றத்தாழ்வுகள், மாணவர் செயல்பாடு, தேசியம், பிராந்தியம், மொழியியல் அரசியல், தெற்காசியாவின் அறிவுசார் வரலாறு ஆகியவை அவரது ஆய்வுகளில் அடங்கும்.
நன்றி: ஸ்க்ரால் இணைய தளம்