தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை மாற்றி காட்டுவேன் – எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin response to Edappadi Palaniswami

தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை மாற்றி காட்டுவேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 14) ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், “திமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து ஒவ்வொரு தனிமனிதனுடைய கோரிக்கையையும் நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் மக்களிடம் திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் நியாயமாக பத்து மணிக்குள் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வருகிற வழி எல்லாம் ஆங்காங்கே மக்கள், பெண்கள், இளைஞர்கள், ஆண்கள், முதியவர்கள், விவசாய பெருங்குடி மக்கள் என சாலையின் இரு புறங்களிலும் நின்று எங்கள் வாகனத்தை வழிமறித்து வரவேற்று எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்கள். அதனால் தான் இங்கு வந்து சேர தாமதம் ஆகியது.

ADVERTISEMENT
சொல்லாத வாக்குறுதிகளும்

இந்த திராவிட மாடல் ஆட்சியின் மீதும், அதை பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய என் மீது அவர்கள் காட்டும் அன்பினால் இங்கு வந்து சேர தாமதம் ஆகியது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள் என்ற பழமொழி தான் எனது நினைவுக்கு வருகிறது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததிலிருந்து நான் கொடுத்திருக்கக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமல்ல.. சொல்லாத வாக்குறுதிகளான காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்க 48 போன்ற வாக்குறுதிகளை செயல்படுத்தி வருகிறோம்.

நம் அரசு எப்படி இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக செயல்படுகிறது என்று ஏராளமான கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிட்டு வருகிறது. ஏராளமான வட இந்திய youtube சேனல்களில் கூட ஆய்வு செய்து திராவிட மாடல் குறித்து அவர்கள் மாநில மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகின்றனர். ஆனால் இது எதுவுமே சிலருக்கு தெரியவில்லை. தெரியவில்லை என்று சொல்வதை விட தெரிந்தும் மறைக்க விரும்புகின்றனர். பொய்களை பரப்புவதும் களங்கம் கற்பிப்பதும் காலம் காலமாக அவர்களது அரசியல். கொள்கையற்ற அந்தக் கூட்டத்திற்கு அதை தாண்டி ஒன்றும் தெரியாது. மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ADVERTISEMENT
பொறுப்பும் கடமையும்

வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு உண்டு அதை நான் உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் நமது அமைச்சர் பெருமக்கள் தங்கம் தென்னரசு, கோவை செழியன், எஸ்.எஸ். சிவசங்கர் ஆகிய மூன்று அமைச்சர்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிருபர்களை நேருக்கு நேராக உட்கார வைத்து, திமுக வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் செயல்பாட்டில் உள்ளன. 40 அறிவிப்புக்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த வகையில் மொத்தம் 404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள் . இது இல்லாமல் ஒன்றிய அரசின் பரிசீலனைக்காக 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளது. மேலும் 64 திட்டங்கள் இப்போதைக்கு நிதி காரணமாக எடுத்துக் கொள்ள இயலாத திட்டங்களாக உள்ளது என்று துறைவாரியாக பிரித்து தெளிவாக மக்களுக்கு விளக்கி சொன்னார்கள்.

உண்மைக்கு வலிமை அதிகம்

ஆனால் நல்லதை எல்லாம் பார்க்க மாட்டேன்; கேட்க மாட்டேன்; உண்மையை பேசமாட்டேன் என்று முடிவோடு இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு வழக்கம்போல் இதுவெல்லாம் தெரியவில்லை. பொய்களை வைத்து கருத்துருவாக்கம் செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் என்றைக்குமே உண்மைக்கு தான் வலிமை அதிகம். நாங்கள் கொடுத்த நீட் விலக்குபோன்ற வாக்குறுதிகளை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதை நாங்கள் மறக்கவில்லை. அதற்காக நாங்கள் முயற்சி செய்யாமல் இருந்தோமா.. இருக்கிறோமா ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடனே நீட் விலக்கிற்கு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அனுப்பினோம். அதை சூழ்ச்சிகள் செய்து ஆளுநர் மூலமாக தடுத்தார்கள். இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அப்போதும் கடுமையான சட்டப் போராட்டங்கள் நடத்தினோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது மறைத்து வைத்தது போல் நாடகமாடவில்லையே..

ADVERTISEMENT

அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வந்தவுடன் ஒன்றியத்தில் நமக்கு ஆதரவான அரசு அமையும் என்று நம்பிக்கையோடு போராடினோம். தமிழ்நாட்டின் உணர்வை புரிந்து கொண்டு இந்தியாவின் இளம் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியும் தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களில் இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைத்தாலும் ஒன்றியத்தில் மைனாரிட்டி பாஜக ஆட்சி அமைந்தது. ஆனால் நாட்டு மக்களுக்கு எதிரான அவர்களது ஆட்சி நெடு நாட்கள் நீடிக்காது.

நான் உறுதியாக சொல்கின்றேன் நிச்சயம் ஒருநாள் நம்முடைய மாநிலத்திற்கான உரிமைகளை காக்கும் ஆட்சி அமையும். இதேபோல் வெளிநாட்டு பயணங்கள் பற்றியும் முதலீடுகள் பற்றியும் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார்.தமிழ்நாட்டை விட்டு தொழில் நிறுவனங்கள் ஓடிப்போக காரணமாக இருந்தவர் பழனிசாமி.

இப்போது எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது. எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று தெளிவாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். இது எதுவும் அவரது காதில் விழமாட்டேன் என்கிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டது என்ன என்பதை அவரால் பட்டியலிட்டு சொல்ல முடியுமா? அதிமுக ஆட்சியின் சீர்கெட்ட நிர்வாகத்தால் தொழில் முதலீட்டாளர்கள் அண்டை மாநிலங்களுக்கு ஓடியதை மறைக்க முடியுமா? அந்த நிலைமையை அப்படியே தலைகீழாக நாம் மாற்றி உள்ளோம். பழனிச்சாமியும் தனது ஆட்சி காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக சொன்னார்கள். அதில் பாதி கூட வரவில்லை. அவரும் வெளிநாடு போனார். முதலீடுகளை ஈர்த்துவிட்டோம் என்றார். ஆனால் கையெழுத்தாகி உள்ளதில் கால்வாசி கூட செயல்பாட்டிற்கு வரவில்லை.

தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாகும் தமிழகம்

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாடுகளுக்கு சென்று ஒப்பந்தம் போட்டதில் 77 விழுக்காடு நிறுவனங்கள் வந்துள்ளது. மீதமுள்ளவைகள் தொடங்கக்கூடிய பணியில் உள்ளது. தமிழ்நாட்டை இந்திய அளவில் அல்ல தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக நிச்சயம் உருவாக்கிக் காட்டுவேன் என்று உறுதி அளித்தார் முதல்வர். அவதூறுகள் பொய்கள் வீண் பழிகள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படக்கூடியவன் நான் அல்ல 50 வருடமாக அதை எல்லாம் பார்த்து விட்டு தான் இன்று இந்த இடத்தில் உங்கள் முன் நிற்கிறேன். 2026 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். மக்கள் தயாராக உள்ளனர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களாட்சி காலமெல்லாம் தொடரும். மேலும் மேலும் தமிழ்நாடு வளரும்” என்று உற்சாகம் பொங்க தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி – அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், திராவிடமாடல்!

இன்று கிருஷ்ணகிரியில் ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா – பொய்களால் காரிருளை விளைவித்திட முடியுமா – தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா என்றெண்ணும் கூட்டத்தின் மலிவான அரசியலை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்! நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்!” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share