லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் சிறப்புப் பாதுகாப்பும் கோரி மக்கள் போராடிவருகின்றனர். அமைதிவழிப் போராட்டங்களின் மீது இளைஞர்கள் சலிப்படைந்திருப்பதைத் தற்போதைய போராட்டம் காட்டுகிறது.
யஷ்ராஜ் ஷர்மா
இந்தியா-சீனா எல்லைப் பதற்றங்களின் மையமாக இருந்த, இமயமலையின் உயரமானதும் குளிர்ச்சியானதுமான பாலைவனப் பகுதியான லடாக்கில் வன்முறை தாண்டவமாடுகிறது. இளைஞர்களால் வழிநடத்தப்பட்ட Gen-Z போராட்டக்காரர்கள், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பிராந்திய அலுவலகத்தை எரித்தார்கள்.
லே பிராந்தியத் தலைநகரில் மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதியபோது, குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். ஆயுதப்படைகளின் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. இந்த மோதல்களில் டஜன் கணக்கான பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக, லடாக்கில் ஆயிரக்கணக்கான மக்கள், உள்ளூர் சிவில் அமைப்புகளின் தலைமையில், அமைதியான முறையில் பேரணிகள், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2019முதல் மத்திய அரசின் கீழ் நேரடியாக நிர்வகிக்கப்படும் இந்த பகுதிக்கு, அதிக அரசியலமைப்புப் பாதுகாப்பையும் மாநில அந்தஸ்தையும் மக்கள் கோரிவருகின்றனர். தங்களுக்கான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் வேண்டுமென்று கோருகின்றனர்.
கடந்த புதன்கிழமை அன்று, அமைதியான போராட்டங்களில் ஏமாற்றமடைந்த இளைஞர் குழுக்கள் அத்தகைய போராட்டங்களிலிருந்து விலகிச் சென்றதாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் கூறினார்.
“இது இளைஞர்களின் எழுச்சி” என்று வாங்சுக் ஒரு வீடியோ அறிக்கையில் கூறினார். தெற்காசிய நாடுகளில், குறிப்பாக இந்த மாதம் நேபாளத்தில் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் அரசாங்கத்தை அகற்றிய சமீபத்திய எழுச்சிகளைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.
லடாக்கில் என்ன நடக்கிறது? அவர்களின் கோரிக்கைகள் என்ன? இமயமலைப் பகுதி இந்த நிலைக்கு எப்படி வந்தது? லடாக்கின் நெருக்கடி இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது ஏன்?
லடாக்கில் மோதல்களைத் தூண்டியது எது?

புதன்கிழமை காலை, உள்ளூர் லடாக் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம், லடாக் அப்பெக்ஸ் பாடி (சமூக-மத மற்றும் அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்பு) தலைமையில் 15ஆவது நாளை எட்டியது.
இந்த அமைப்பைச் சேர்ந்த 62, 71 வயதுடைய இரண்டு பேர், இரண்டு வார உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக, ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளூர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். மோடி அரசாங்கம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தாமதம் செய்வதால் போராட்டக்காரர்கள் கோபமடைந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாததைக் கண்ட இளைஞர்கள் “அமைதி வேலைக்கு ஆகாது” என்று நினைக்க ஆரம்பித்தார்கள் என்று வாங்சுக் புதன்கிழமை மாலை மெய்நிகர் பத்திரிகைச் சந்திப்பில் கூறினார்.
இளைஞர்கள் தலைமையிலான குழுக்கள் லேயில் உள்ள தியாகிகள் நினைவுப் பூங்காவில் உள்ள போராட்டத் தளத்திலிருந்து பிரிந்து, உள்ளூர் அரசு கட்டிடங்களையும் பாஜக அலுவலகத்தையும் நோக்கி, கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். இது காவல்துறையினருடன் மோதலுக்கு வழிவகுத்தது. நான்கு பேர் கொல்லப்பட்டனர்; ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். பலரும் காயமடைந்தனர்.
இந்திய உள்துறை அமைச்சகம், “கட்டுக்கடங்காத கும்பலுடன்” நடந்த மோதல்களில் 30க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்ததாகவும் “காவல் துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது” என்றும், இது “சில உயிரிழப்புகளுக்கு” வழிவகுத்ததாகவும் தன்னுடைய அறிக்கையில் கூறியது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை என்ன?

2019இல், மோடி அரசாங்கம் இந்திய அரசியலமைப்பின் கீழ் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும் மாநில அந்தஸ்தையும் நீக்கியது. அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு, லடாக் என மூன்று பகுதிகள் இருந்தன. லடாக்கில் முஸ்லிம்களும் பௌத்தர்களும் தலா 40 சதவீதம் உள்ளனர்.
பின்னர், மோடி அரசாங்கம் மாநிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது: சட்டமன்றம் கொண்ட ஜம்மு-காஷ்மீர், சட்டமன்றம் இல்லாத லடாக். இரண்டுமே மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் அதிகாரங்கள் அவற்றிக்கு இல்லை. எனினும், ஜம்மு-காஷ்மீரின் சட்டமன்றம் அதன் மக்களுக்கு உள்ளூர் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. அவர்கள் தங்கள் கவலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தில்லிக்குத் தெரிவிக்கலாம். லடாக்கிற்கு அதுகூட இல்லை என்று உள்ளூர்வாசிகள் வாதிடுகின்றனர்.
மாநில அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து, லடாக் அதிகாரிகளின் ஆட்சியின் கீழ் உள்ளது. இந்தப் பிராந்தியத்தின் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். இந்த நிலை, லடாக்கை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தூண்டியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி சமூகங்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுக்குத் தன்னாட்சி நிர்வாக அமைப்பையும் ஆட்சி அமைப்புகளையும் இந்த அட்டவணை வழங்குகிறது. தற்போது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 10 பகுதிகள் இந்த அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

மோடி அரசாங்கம் இதுவரை லடாக்கிற்கு மாநில அந்தஸ்தையும் ஆறாவது அட்டவணையின் பாதுகாப்புகளையும் வழங்கவில்லை. ஜம்மு-காஷ்மீரிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டதால், முன்பு ஒருங்கிணைக்கப்பட்ட பகுதியில் பெரும்பாலான வேலைகள் இருந்த ஜம்மு-காஷ்மீரில் லடாக்கிகள் வேலை தேடுவது கடினமாகிவிட்டது. 2019 முதல், அரசுத்துறை வேலைகளில் பணியமர்த்துவதற்கான தெளிவான கொள்கைகளை இந்திய அரசு செயல்படுத்தவில்லை என்றும் லடாக் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
லடாக்கில் 97 சதவீத கல்வியறிவு விகிதம் உள்ளது, இது இந்தியாவின் தேசிய சராசரியான சுமார் 80 சதவீதத்தை விட அதிகமாகும். ஆனால், 2023ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், லடாக்கின் பட்டதாரிகளில் 26.5 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர் – இது தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம். புதன்கிழமை அன்று இந்தக் கோபம் உச்சத்தை எட்டியது.
“லடாக்கில் நடப்பது பயங்கரமானது,” என்று லேஹ்-ஐச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் சித்திக் வாஹித் கூறினார். “லடாக் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதைப் பார்ப்பது பயமாக இருக்கிறது.”
“கடந்த ஆறு ஆண்டுகளில், லடாக்கிகள் தங்கள் அடையாளம் எதிர்கொள்ளும் ஆபத்துகளை உணர்ந்துள்ளனர்,” என்று அவர் கூறினார். “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
“இளைஞர்களின் கோபம் கவலைக்குரியது. ஏனெனில் அவர்கள் பொறுமையற்றவர்களாக உள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக ஒரு தீர்வுக்குக் காத்திருக்கிறார்கள்,” என்று வாஹித் கூறினார். “இப்போது, அவர்களுக்கு ஒரு எதிர்காலம் இல்லாததால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.”
லடாக்கில் முந்தைய போராட்டங்கள்
இந்தப் பிராந்தியத்தின் பகுதி தன்னாட்சி அந்தஸ்தும் மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டதிலிருந்து, பல உள்ளூர் சிவில் குழுக்கள் போராட்டப் பேரணிகளையும், சில நேரங்களில், உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தியுள்ளன.
கல்வியாளர் வாங்சுக், கடந்த மூன்று ஆண்டுகளில் லடாக்கிற்கு அரசியலமைப்பு பாதுகாப்புகள் கோரி ஐந்து உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளார். அவர் லடாக்கில் போராட்டங்களின் மிகவும் பிரபலமான முகம். அவருக்குப் பரந்த அளவில் ஆதரவு உள்ளது. வாங்சுக்கின் வாழ்க்கை ஒரு பாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படத்திற்கும் உத்வேகம் அளித்தது. அந்த திரைப்படம் சீனாவிலும் பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றது.
ஆனால் புதன்கிழமை நடந்த போராட்டம் லடாக்கின் அரசியல் வரலாற்றில் மிகவும் கொடூரமானது.
போராட்டம் நடத்தும் ஆர்வலர்களுடன் பேச மோடி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் சிவில் உறுப்பினரான சஜத் கார்கிலி, லடாக்கில் நடந்த வன்முறை “எங்கள் இளைஞர்களின் விரக்தியை எடுத்துக்காட்டுகிறது” என்று கூறினார். “இங்கு இளைஞர்கள் கோபமாக உள்ளனர். அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று கார்கிலி கூறினார். “இந்த அழைப்புகளை மோடி அரசாங்கம் அலட்சியப்படுத்தக் கூடாது” என்றார் அவர்.
லடாக் ஏன் இவ்வளவு முக்கியமானது?

லடாக் இந்தியாவின் இமயமலை எல்லையில், சீனாவை ஒட்டியுள்ளது. இந்தப் பிராந்தியம், சீனாவுடனான மோதலின் போது இந்தியாவின் இராணுவத்திற்கு முக்கியமான மலைப் பாதைகள், விமானத் தளங்கள், விநியோக வழித்தடங்களை இணைக்கிறது.
2020இல், சீன ஊடுருவலைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இந்திய, சீனப் படைகள் மோதிக் கொண்டன. குறைந்தது 20 இந்தியப் படையினரும் நான்கு சீன வீரர்களும் இந்த மோதலில் கொல்லப்பட்டனர். இருபுறமும் பல்லாயிரக்கணக்கான படைகளை அணிதிரட்ட இது காரணமாக அமைந்தது. கனரக ஆயுதங்களும் பிற உள்கட்டமைப்புகளும் மலைச்சிகரங்களுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. அப்போதிலிருந்தே லடாக் இந்தியா-சீனா எல்லைப் பதற்றங்களின் மையமாகவே உள்ளது. பல சுற்று இராணுவ, இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து உறவில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.
2019இல் மோடி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் லடாக்கில் ஒரு புதிய அச்சுறுத்தலாக இப்போது பரிணமித்திருக்கின்றன என்கிறார் அரசியல் ஆய்வாளர் வாஹித். அது உள் அச்சுறுத்தல் என்கிறார் அவர். காஷ்மீர் நெடுநாட்களாகவே “அதிருப்தியின் மையமாக” இருந்துவருகிறது. இப்போது, லடாக்கும் அந்த வரிசையில் இணைந்துகொண்டிருக்கிறது.