கரூர் கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று (செப்டம்பர் 27) மாலை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய பலர் கவலைக்கிடமாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 39 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து கரூர் வந்த முதல்வர் ஸ்டாலின், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அதிகாலை 3.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மிகுந்த துயரத்தோடும் கனத்த இதயத்தோடும் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் நடந்திருக்க கூடிய இந்த கொடூரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு சோக சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதைப் பற்றி விவரமாக பேசுவதற்கு கூட என் மனது இடம் கொடுக்கவில்லை. அவ்வளவு வேதனையில் இருக்கிறேன்.
நேற்று இரவு 7.45 மணிக்கு சென்னையில் நான் அதிகாரிகளோடு பேசிக் கொண்டிருந்தபோது, கரூரில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி பல பேர் மூச்சு திணறலுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று தகவல் கிடைத்தது.
அந்த செய்தி கிடைத்த உடனே, கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு, இந்த செய்தி உண்மையா என்று கேட்டேன். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று என்னவென்று பாருங்கள் என்று சொன்னேன்.
அதன் பிறகு கலெக்டரிடமும் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவரும் சில விஷயங்களை எல்லாம் சொன்னார்.
முதலில் 4,5 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. போகப் போக அதிகமானோரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போகிறார்கள் என்று செய்தி தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
அதைத்தொடர்ந்து மரண செய்திகளும் வர ஆரம்பித்துவிட்டன. இதை கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. மரண செய்தி வந்ததும் எனக்கு அச்சம் ஏற்பட்டு, இந்த மாவட்டத்தின் பக்கத்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசினேன்.
அந்த சமயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தார். அவரை உடனே கரூர் செல்லுமாறு உத்தரவிட்டேன்.
அதற்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் தொடர்பு கொண்டு உடனடியாக கரூர் சென்று என்னவென்று பாருங்கள் என்று அவரையும் அனுப்பி வைத்தேன்.
பிறகு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக இந்த விவகாரத்தை கவனிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டு அவர்களையும் அனுப்பி வைத்தேன்.
ஆனால் இங்கிருந்து வந்த செய்திகள் எல்லாம் என் மனதை கலங்கடித்தது. அதன் பிறகு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு சென்று துரைமுருகன், நேரு, வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபி ஆகியோரை அழைத்து கலந்து பேசினேன்.
பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அதிகாரிகள், கரூரை ஒட்டி இருக்கக்கூடிய ஐந்து ஆறு மாவட்ட அரசு அதிகாரிகளை மருத்துவர்களை கரூருக்கு செல்ல உத்தரவிட்டேன். அந்த வகையில் அவர்களும் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த சம்பவத்தில் மொத்தம் 39 உயிர்களை இழந்திருக்கிறோம்.
இதில் ஆண்கள் 13 பேர். பெண்கள் 17 பேர். ஆண் குழந்தைகள் 4 பேர் பெண் குழந்தைகள் 5 பேர் ஆவர்.
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இதுவரை நடக்காதது. இனிமேலும் நடக்கக்கூடாது.
51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26 பேர் ஆண்கள். 25 பேர் பெண்கள். இவர்கள் விரைவில் குணமடைந்து வரவேண்டும்.
இறந்து போன உயிர்களுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது குடும்பத்தினரை என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கிறேன்.
மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அதுமட்டுமல்ல ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காலை 9:30 மணிக்கு தான் மருத்துவமனைக்கு வரலாம் என்று விமான டிக்கெட்டை பதிவு செய்திருந்தேன். ஆனால் இந்த கொடூரமான காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்தபோது எனக்கு மனது கேட்கவில்லை.
ஒரு மணி அளவில் விமானத்தை பிடித்து இங்கு வந்து சேர்ந்து இருக்கிறேன்” என்றார்.
இதைத்தொடர்ந்து விஜய் கைது செய்யப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், ”ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் நோக்கத்தோடு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. யார் கைது செய்யப்படுவார்கள், கைது செய்யப்பட மாட்டார்கள் என நீங்கள் எந்த எண்ணத்தில் கேட்கிறீர்களோ அதற்கு நான் உட்படுவதற்கு தயாராக இல்லை” என்று கூறினார்.
உரிய இடம் ஒதுக்கப்படவில்லை பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்..
