திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்பட்டிருக்கிறது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்றத்தில் இன்று பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, திருப்பரங்குன்றம் விவகாரம் மிகுந்த கவலை அளிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். தனி நீதிபதி தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என காட்டமான விமர்சனங்களை முன் வைத்தார். டி.ஆர்.பாலு பேச்சுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கண்டனம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் கூட திமுக அரசாங்கம் மக்களை வழிபடுவதற்கு தடுத்திருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசாங்கமும் தமிழ்நாட்டின் காவல் துறையும் மதிக்காமல் அங்கு போக இருந்த மக்களை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.
வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட பிறகு மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்ற அமர்வு 50 சிஐஎஸ்எப் வீரர்கள் உதவியுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால் அங்கு தீபம் ஏற்ற விடாமல் தடுத்து, அங்கு செல்பவர்களை எல்லாம் கைது செய்து திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கமும், அங்கிருக்கும் காவல்துறையும் ஒரு அராஜக போக்கில் ஈடுபட்டுள்ளது.
மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக இந்து மக்கள் வெற்றிவேல், வீரவேல் என்று முருகப்பெருமானை அங்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வழிபாட்டு உரிமையை தடுப்பதற்கு திமுக அரசாங்கம் ஓட்டுக்காக, வாக்கு வங்கி அரசியலுக்காக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை தாஜா செய்ய வேண்டும் என்ற நோக்கோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக அரசால் அங்கு சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து இருக்கிறது. திமுகவின் காவல்துறை சட்டம் ஒழுங்கை கையில் எடுத்திருக்கிறது. அங்கிருக்கும் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதை விட்டுவிட்டு வழிபாட்டுக்கு செல்லுகின்ற மக்கள் மேல் மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள்.
அங்கு சென்ற எங்கள் பாஜகவின் மாநில தலைவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்து முன்னணியின் திரு காடேஸ்வரன் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அங்கு யார் யாரெல்லாம் செல்கிறார்களோ அவர்கள் எல்லாம் கைது செய்யப்படுவது ஜனநாயகத்தின் குரல் ஆனது நசுக்கப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுகிறது.
மக்களின் வழிபாட்டு உரிமை நசுக்கப்பட்டு இருக்கிறது திமுக அரசாங்கம் அரசியலுக்காக இத்தனையையும் செய்து கொண்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவோ அதை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். தீர்ப்பை நடைமுறைபடுத்த தயாராக இருக்க வேண்டும். தீர்ப்பின் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள 25 ஆவது சரத்து ஒவ்வொருவரும் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி கொடுத்திருக்கிறது. அந்த அடிப்படை உரிமையை தடுக்கும் அரசாக திமுக அரசு இருந்து கொண்டிருக்கிறது.
இது மாநிலத்தில் பேச வேண்டிய விஷயம். அதை விட்டு விட்டு இங்கு வந்து நாடாளுமன்றத்தில் இடையூறு கொடுக்கின்றனர். என தெரிவித்தார்.
