கோவையில் நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.43, 844 கோடி முதலீட்டில் புதிய தொழில்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சென்றுள்ளார். இன்று (நவம்பர் 25) காலையில் காந்திபுரத்தில் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார்.
தொடர்ந்து இன்று மாலை கோவையில் தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இதில், ரூ.43,844 கோடி மதிப்பிலான 158 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம், 1,00,709 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த புகலிடமாக மாறி வருகிறது. மின்னணுவியல், பொது உற்பத்தி, ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற உயர் மதிப்பு கூட்டப்பட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்த மாநாடு முக்கிய கவனம் செலுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
கோவையை உயர் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையமாக மாற்றுவதே இந்த மாநாட்டின் தலையாய இலக்கு என்று தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக தூத்துக்குடியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் ரூ.32,554 கோடி மதிப்பிலான முதலீடுகளும், ஓசூரில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் ரூ.24,307 கோடி மதிப்பிலான முதலீடுகளும் ஈர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
