பாவ் பாஜி தோசை ரோல்
இந்தத் தலைமுறையினருக்கு எதையும் புது மாதிரி செய்து பார்ப்பதில்தான் விருப்பம் அதிகம். உணவும் விதிவிலக்கல்ல. சப்பாத்தியாக சாப்பிட மறுக்கும் குழந்தைகள்கூட ரோல் என்ற பெயரில் கொடுத்தால் ஸ்டைலாக சாப்பிடுவார்கள். இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் வீட்டிலேயே எளிதாகச் செய்து அசத்தக்கூடிய பாவ் பாஜி தோசை ரோலை இந்த வார வீக் எண்டில் முயற்சி செய்து பாருங்கள்.
என்ன தேவை?
தோசை மாவு – ஒரு கப்
வேகவைத்து மசித்த பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
காலிஃப்ளவர் துருவல் – கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
பொடியாக நறுக்கிய தக்காளி – 3 டேபிள்ஸ்பூன்
பாவ் பாஜி மசாலாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
கிரீன் சில்லி சாஸ் – 3 டேபிள்ஸ்பூன்
பனீர் துருவல் – கால் கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) கலவை – கால் கப்
வெண்ணெய் – சிறிதளவு
வேகவைத்து, தோல் நீக்கி மசித்த பீட்ரூட் – கால் கப்
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தோசைக்கல்லைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும். அதன் மீது சிறிதளவு வெண்ணெய் தடவி, சிறிதளவு வெங்காயம், தக்காளி, பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர் துருவல், மசித்த பீட்ரூட், குடமிளகாய், கொத்தமல்லித்தழை, பனீர் துருவல், கிரீன் சில்லி சாஸ், உப்பு, பாவ் பாஜி மசாலாத்தூள் சேர்த்துப் பரப்பவும். பிறகு மூடி போட்டு, தோசையை வேகவைத்து, பாய் போல சுருட்டித் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்… ஸ்டாலின் மனசில் இருப்பது என்ன?