கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் ரியாலிட்டி ஷோ பல பெரிய இயக்குனர்களைத் தமிழ் சினிமாவுக்குத் தந்துள்ளது.
திரைத்துறையில் அனுபவம் உள்ள அல்லது இல்லாத, இயக்குனராகத் துடிப்பவர்கள் தங்கள் குறும்படத்தை எடுத்துக் கொண்டு வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
அதை பிரபல இயக்குனர்கள் பார்த்துப் பாராட்டி நிறைகுறைகளைச் சொல்லி, (சில சமயம் கண்டித்தும் கூட) மதிப்பெண் போடுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முதல் பரிசு வழங்கப்படும். அதை விட முக்கியமாக சினிமாவில் டைரக்ஷன் வாய்ப்புக் கதவுகள் லேசாகத் தட்டினாலே கிடைக்கும்.
கார்த்திக் சுப்புராஜ், சூது கவ்வும் நலன் குமாரசாமி, மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன், டிராகன் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து…. இப்படிப் பல பிரபலமான இயக்குனர்கள், இந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் திரைப்பட இயக்குனர் ஆகும் வாய்ப்பு பெற்றவர்கள்.
அப்படியானால் அந்த நிகழ்ச்சியை இயக்கியவர் என்று ஒருத்தர் இருப்பார் இல்லையா? அவர் என்ன ஆனார்?
இப்போதுதான் இயக்குனர் ஆகிறார்.
‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கியவர் சிவநேசன்.
‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்துக்கு அடுத்த படமாக Incredible Productions என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இப்போதுதான் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் சிவநேசன்.
கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். (படத்தின் பெயரா? ரிலீசுக்கு முன்ன எப்படியும் வச்சுதானே ஆகணும்.)
“எதிர்பாராத திருப்பங்களைத் திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். இந்தப் படத்தில் திரைக்கதைதான் ஹீரோ. ” என்கிறார்.
சந்தோசம் எனில் மேக்கிங் ஹீரோயினா இருக்கணும். வில்லனாகவோ காமெடியனாகவோ இல்லாம பாத்துக்குங்க.
– ராஜ திருமகன்
