ADVERTISEMENT

’ஐயோ மொத்த பணமும் போச்சே’ – ஆன் லைன் மோசடிக்கு எதிராக அரசு வெளியிட்ட அதிரடி பாடல்!

Published On:

| By Minnambalam Desk

Chennai Police Awareness Song against online fraud

கற்பனைகளை விட பல சமயம் உண்மைகள் நம்ப முடியாததாக இருக்கும் என்பது, எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஆன்லைன் மோசடிகளுக்குப் பொருந்தும்.

பல ஆன்லைன் மோசடிகள் பற்றிய விவரங்களை ஆதியோடு அந்தமாக முழுக்கக் கேட்கும்போது, இப்படியும் ஏமாற்ற முடியுமா என்ற ஆச்சர்யம் மட்டுமல்ல. இப்படியுமா ஏமாறுவாங்க என்றும் வாயைப் பிளக்க வேண்டி வரும்.

ADVERTISEMENT

எல்லாவற்றுக்கும் காரணம் பணத்தாசை.

அதற்காக ஓர் அரசாங்கம் “பண ஆசையிலதான நீ ஏமாந்த?. நல்லா அனுபவி” என்று சொல்லி விட்டுப் போக முடியாது இல்லையா?.

ADVERTISEMENT

ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகள் பல.

இதன் ஒரு பகுதியாக, தற்போது “Online Fake Share Market Scams” குறித்து மக்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டு உள்ளது சென்னை பெருநகர காவல்துறை.

ADVERTISEMENT

இந்தப் பாடலில், காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டீசல் படத்தின் “பீர் பாடல்” மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற கானா குணா பாடலைப் பாடி இருக்கிறார்.

இந்த விழிப்புணர்வுப் பாடல் மூலம், போலியான ஷேர் மார்க்கெட் முதலீட்டுத் தளங்களின் காட்சிகளையும், அவை மக்களை எவ்வாறு ஏமாற்றிப் பணத்தை பறிக்கின்றன என்பதையும் காட்டி, மக்கள் அது போன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சென்னை பெருநகர காவல் துறையினர், நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ரமேஷ் திலக் நடித்த “Oh My Kadavule” திரைப்படக் காட்சிகளை போலவே ஒரு விழிப்புணர்வு விளம்பரம் வெளியிட்டது. அதில் Online Investment Scams குறித்து எச்சரிக்கை அளிக்கப்பட்டது.

அந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, சுமார் 1 கோடி பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய பாடல் வெளியீட்டின் மூலம், சென்னை பெருநகர காவல் பொதுமக்களிடம் மீண்டும் ஒரு முறை, “ஆன்லைன் வழியாக ‘மிகுந்த லாபம் தரும் முதலீடு’, ‘உடனடி வருமானம்’, அல்லது ‘பங்குச் சந்தை நிபுணர்கள்’ என கூறி வரும் போலி தளங்கள் மற்றும் நபர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.

உங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை இழப்பதிலிருந்து பாதுகாக்க, எச்சரிக்கையாக இருங்கள்”, என்று அறிவுறுத்துகின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் இதனைப் பார்த்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் பகிர்ந்து, ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சென்னை பெருநகர காவல் கேட்டுக்கொள்கிறது.

இந்தப் பாட்டை பாத்துகிட்டே யாராவது ஆன்லைன் மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டுமே .

-ராஜ திருமகன்

Freedom From Cyber Fraud | Awareness Song by Greater Chennai Police | Fake Share Market Scam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share