ADVERTISEMENT

VIDEO : அவமானப்படுத்திய ஹிகாரு… சர்வதேச மேடையில் தக்க பதிலடி கொடுத்த குகேஷ்

Published On:

| By christopher

world champion gukesh thug reply to hikaru in usa

அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் போட்டியில் ஹிகாருவை வீழ்த்தி தனது ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த உலக சாம்பியன் குகேஷ் இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு டெக்சாஸில் நடந்த “செக்மேட்: அமெரிக்கா vs இந்தியா” கண்காட்சிப் போட்டியில், ஹிகாரு நகமுரா உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார்.

ADVERTISEMENT

அந்த வெற்றிக்குப் பிறகு, குகேஷின் ராஜாவை எடுத்து கூட்டத்தின் மீது வீசி தனது வெற்றியைக் கொண்டாடினார் ஹிகாரு நகமுரா.

இந்தச் செயல் செஸ் விதிகளுக்குப் புறம்பானது என்றும், உலக சாம்பியனுக்கு மரியாதைக் குறைவை ஏற்படுத்தியதாகவும் பல வீரர்கள், செஸ் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில்அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற ’கிளட்ச் செஸ்: சாம்பியன்ஸ் ஷோடவுன் 2025′ (Clutch Chess: Champions Showdown 2025) ரேபிட் செஸ் தொடரின் மினி-போட்டியில், , இந்த இரு வீரர்களும் நேற்று மீண்டும் மோதினர்.

இப்போட்டியில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய குகேஷ், சிறப்பான வியூகத்துடன் நகமுராவை எதிர்கொண்டார். இறுதியில் துல்லியமான ஆட்டத்தின் மூலம் நகமுராவை வீழ்த்தி, மினி-போட்டியை 1.5–0.5 என்ற கணக்கில் வென்றார்.

ADVERTISEMENT

நகமுரா தோல்வியை ஒப்புக்கொண்டு கை குலுக்க எழுந்தபோது, அனைவரும் குகேஷின் எதிர்வினையை எதிர்பார்த்தனர். ஆனால், குகேஷ் எந்தவித உணர்ச்சி வெளிப்பாடும் காட்டாமல், நகமுரா செய்ததைப் போல ராஜாவைத் தூக்கி எறியாமல், அமைதியாக சதுரங்க காய்களை மீண்டும் அடுக்க ஆரம்பித்தார்.

குகேஷின் இந்தக் கட்டுக்கோப்பான மற்றும் கண்ணியமான செயல், அவரது வயதைக் கடந்த முதிர்ச்சியைக் காட்டியது என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். இதுவே ஒரு சாம்பியனுக்குரிய பண்பு என்றும், அவர் அமைதியின் மூலம் நகமுராவுக்கு சரியான பதிலடி கொடுத்தார் என்றும் செஸ் உலகம் கொண்டாடி வருகிறது.

உலக சாம்பியன் என்ற தனது பெருமைக்கு ஏற்ப, களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் மட்டுமே பேசுவேன் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளார் குகேஷ்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share