ADVERTISEMENT

கிஸ் : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

kavin preethi kiss movie review sep 19

இப்படத்தால் வருவது வருத்தமா, நெகிழ்ச்சியா?

ஒரு திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் முதல் ரிலீஸ் வரை, சர்ச்சையை உருவாக்க வேண்டுமென்ற நோக்கில் ’அப்டேட்’ தருகிற குழுக்கள் எல்லா காலத்திலும் உண்டு. எப்படியாவது ரசிகர்களை ஈர்த்து, முதல் சில நாட்களில் தியேட்டர்களுக்கு அவர்களை வரவழைப்பதே அதன் பின்னிருக்கும் நோக்கம். கிட்டத்தட்ட அப்படியொரு விஷயத்தை நிகழ்துகிறார்களோ என்ற ஐயத்தைத் தொடக்கம் முதலே ஏற்படுத்தி வந்தது ‘கிஸ்’ படக்குழு. டைட்டில் அறிவிக்கப்பட்டது முதல் கடைசி நிமிடப் பத்திரிகையாளர் சந்திப்பு வரை அதுவே தென்பட்டது.

நடன இயக்குனராக அறியப்பட்ட சதீஷ் கிருஷ்ணன் முதல்முறையாக இயக்கியுள்ள இப்படத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ADVERTISEMENT

இப்படம் தரும் திரையனுபவம் எத்தகையது?

மிகச்சிறிய கதை!

’காதலே கூடாது’ என்று நினைக்கிற ஒருவன், இப்பூமிப்பந்தை வளர்த்தெடுப்பதே காதல் தான் என்ற புரிதலை வந்தடைவதைச் சொல்கிறது ‘கிஸ்’ திரைப்படம்.

ADVERTISEMENT

மேற்சொன்னதைக் கொள்கையாகக் கொண்டிருந்த ஒரு அரசன், ஒரு சிப்பாய் மற்றும் அவரது காதலியின் மரணத்திற்குக் காரணமாகிறார். பின்னொரு நாள், அதே அரசன் ஒரு மங்கையைக் காதலிக்கிறார். ஆனால், அவர் காதலைத் தெரிவித்த அடுத்த நொடியே அப்பெண் இறந்து போகிறார்.

அப்போதுதான், தான் கொன்ற சிப்பாய் மற்றும் அவரது காதலியின் சாபமே தன்னைத் துரத்தி வருவதை உணர்கிறார் அந்த அரசன்.

ADVERTISEMENT

அந்தக் கதையில் காதல் குறித்த ஒரு புத்தகம் வருகிறது. அதனை அவர் கடலில் வீசுகிறார்.

நூற்றாண்டுகள் கழித்து, அது ஒரு இளைஞனின் கையில் கிடைக்கிறது.

அந்த இளைஞனும் காதல் என்றாலே கொலை வெறி கொள்கிற மனிதன் தான். அந்த இளைஞன் காதலை வெறுக்கக் காரணம், தனது தந்தைக்கு இன்னொரு காதலி உண்டு என்பதை அறிந்தது தான்.

அதன்பிறகு எத்தனை முறை தாயையும் தன்னையும் சகோதரனையும் சந்திக்கத் தந்தை வந்தாலும் அவரை விரட்டியடிக்கிறார். தந்தை என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்கிற மனநிலையில் அவர் இல்லை.

அப்படிப்பட்ட அந்த இளைஞரைப் புலம்ப வைக்கிறது அந்த புத்தகம். கடலில் வீசப்பட்ட அப்புத்தகம் ஒரு பிச்சைக்காரர் கையில் கிடைத்து, பிறகு அது ஒரு பெண்ணின் மூலமாக அந்த இளைஞரை வந்தடைகிறது.

அந்த நாள் முதல் காதலுடன் முத்தமிட்டுக் கொள்கிற ஜோடியைக் கண்டதுமே, எதிர்காலத்தில் அவர்கள் எப்படியிருப்பார்கள் என்பது அவரது மனக்கண்ணின் தெரிகிறது. அவை எல்லாமே ‘பகீர்’ ரகத்தில் இருக்கின்றன.

முதலில் தனது சகோதரன் ஒரு பெண்ணை முத்தமிடுவதைக் காண்கிறார் அந்த இளைஞர். அடுத்த நொடியே, அப்பெண்ணின் முன்னாள் காதலனால் சகோதரன் கத்தியால் குத்தப்படுவது போன்ற காட்சிகள் அவருக்குத் தென்படுகின்றன.

அது ‘பிரமை’ என்று மறுதலிக்க முயலும்போது, அந்த சம்பவம் உண்மையாக நிகழப் போவதை அறிகிறார்.

மிகுந்த பிரயத்தனப்பட்டு ஓடிச் சென்று, அதனைத் தடுத்து நிறுத்துகிறார். அதன்பின் அது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிறது.

’எல்லாவற்றுக்கும் காரணம் இந்த புத்தகம் தான் என்றால் அதனைத் தந்த பெண்ணிடமே கொடுத்துவிடலாமே’ என்று அவரைத் தேடிச் செல்கிறார். அந்த நொடியே அவர் மீது ஈர்ப்பு கொள்கிறார்.

ஒருகட்டத்தில் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்க, இரு பக்கமும் காதல் துளிர்க்கிறது. அதனை இருவருமே மறைக்க முயல்கின்றனர். ஒருகட்டத்தில் அதனைத் தெரிவிக்கலாம் என்று இருவருமே முடிவு செய்கின்றனர்; ஆனால், எதிர்பாராத ஒரு சூழல் இருவரையும் முத்தமிட்டுக் கொள்ள வைக்கிறது.

அது, ஒரு உண்மையை அந்த இளைஞருக்குத் தெரிவிக்கிறது. அதனை அறிந்தவுடன் அவர் நொறுங்கிப் போகிறார்.

அந்த உண்மை எப்படிப்பட்டது? அதன்பின் இருவரும் தொடர்ந்து காதலோடு பழகினார்களா? அந்த புத்தகம் என்னவானது என்று சொல்கிறது ‘கிஸ்’ இரண்டாம் பாதி.

இப்படத்தின் கதை மிகச்சிறியது. ஆனால், சில கதாபாத்திரங்களைக் கொண்டு அதனை நீட்டி முழக்கித் திரையில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனரான சதீஷ் கிருஷ்ணன்.

ஜென்ஸீ படமா இது..?

நாயகன் கவினுக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது. அதனைத் தக்க வைத்துக்கொள்கிற வகையில் தனக்கான படங்களை அவர் தேர்வு செய்து வருகிறார்.

அதற்கேற்றவாறு ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என்று பல விஷயங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்குமாறு இக்கதை உருவாகியிருப்பது நல்ல விஷயம்.

அதேநேரத்தில், ‘இது ஜென்ஸீ ரசிகர்களுக்கான படமா’ என்று கேட்டால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இதில் புதிதென்று எந்த விஷயமும் இல்லை.

‘அயோத்தி’, ‘எலக்சன்’ படங்களில் தலைகாட்டிய ப்ரீத்தி அஸ்ரானி இதில் நாயகி. அவரது நடனம், நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. என்ன, காட்சிக்குக் காட்சி உடல்வாகு மாறுபட்டுத் தெரிவதைத் தவிர்க்க முயற்சித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இவர்களோடு தேவயானி, ராவ் ரமேஷ், கௌசல்யா, கல்யாண் எனப் பலர் இதில் நடித்துள்ளனர். ஆர்ஜே விஜய் மற்றும் அவரது தந்தையாக நடித்துள்ள விடிவி கணேஷ் இருவரும் தமது வசன உச்சரிப்பினால் நம்மைச் சிரிக்க வைக்கின்றனர்.

நாயகன் நாயகியின் முதல் சந்திப்பு மற்றும் கிளைமேக்ஸ் காட்சி இரண்டிலும் மழையும் ஒரு பாத்திரமாக இடம்பெற்றுள்ளது. அவை ‘க்ளிஷே’ என்றபோதும், நம் மனதை எளிதாகத் தொட உதவியிருக்கின்றன.

இதற்கு முன்னர் சில படங்களில் பார்த்த விஷயங்கள் இடம்பெற்றபோதும், ‘கிஸ்’ திரையில் சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்கக் காரணம் எளிமையும் இனிமையும் நிறைந்த காட்சியமைப்பும் ஆக்கமும் தான்.

முகில், சவரிமுத்து இருவரும் எழுத்தாக்கத்தில் சதீஷ் கிருஷ்ணன் உடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், கலை இயக்குனர் மோகன மகேந்திரன், படத்தொகுப்பாளர் ஆர்.சி.பிரனவ் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குனரின் மனவுலகைத் திரையில் காட்ட உதவியிருக்கின்றனர்.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் ‘ஓகே’ ரகம். ஆனால், பின்னணி இசை வேறொரு உலகுக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

டிஐ, விஎஃப்எக்ஸ், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட இதர நுட்பங்களும் சிறப்ப்பாகவே கையாளப்பட்டுள்ளன.

’கிஸ்’ என்ற டைட்டிலை கேட்டதுமே ‘ஏ’ சான்றிதழ் பெறும் வகையில் காதல் திரை முழுக்க நிறைந்திருக்கும் என்று சிலர் நினைக்கக்கூடும். இன்று படம் பார்க்க வருபவர்களில் கணிசம் இளையோர் தான் என்ற சாக்கில், குறிப்பிட்ட அளவில் ஆபாசக் காட்சிகளை ’கிஸ்’ஸீல் நிறைத்திருக்கலாம்.

கதாபாத்திரங்களின் நெருக்கத்தைச் சொல்வதாகக் காட்டி, அதனை அரங்கேற்றியிருக்கலாம். அதனைத் தவிர்த்திருக்கிறது இப்படக்குழு. அது பாராட்டுக்குரிய விஷயம்.

வழக்கமான ரொமான்ஸ் வகைமை படத்தில் கொஞ்சமாக ‘பேண்டஸி’ கலந்த ’ட்ராமா’ அனுபவத்தைத் தருகிறது ‘கிஸ்’. அதேநேரத்தில், அந்த பேண்டஸி தன்மை கொண்டு இன்னும் அழ, சிரிக்க, நெகிழ்ச்சியடைய, காதலில் உருக வைக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது. அது வருத்தம் தரும் விஷயம்.

நிறை குறைகளைத் தாண்டி, இப்போது நாம் திரையில் காண்கிற ‘கிஸ்’ பெரிதாக அயர்ச்சியடையச் செய்யவில்லை என்பது ஆறுதல் தருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share