தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 38 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்திகளை கேட்ட முதல்வர் ஸ்டாலின் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோரை கரூருக்கு அனுப்பி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
பின்னர் சென்னையில் தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிந்த உடனேயே தனி விமானத்தில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகளுடன் தனி விமானத்தில் இரவோடு இரவாக கரூர் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.
கரூர் துயர சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சகம் தரப்பில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கரூர் துயர சம்பவங்கள் குறித்து கேட்கப்பட்டது; பின்னர் கரூர் சம்பவம் தொடர்பாக அறிக்கை கொடுக்கவும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.