தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மோசடியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோசடியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது உறுதியானால் அது குறித்தும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செநதில்குமார், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிராக தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். c
இதேபோல கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி ஏமூர் பன்னீர்செல்வம், சக்திவேல் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது; மேலும் சிபிஐ விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் சக்திவேல் மனுக்கள் மோசடியானவை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் மோசடியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா பெஞ்ச், அப்படி மோசடியான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்; மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது உறுதியானால் அது தொடர்பாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம் என தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற மனுத் தாக்கலில் என்ன மோசடி?
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில் ஏமூரைச் சேர்ந்த பிரித்திக் என்ற சிறுவனனின் தந்தை பன்னீர்செல்வம், அதே ஏமூரைச் சேர்ந்த உயிரிழந்த சந்திராவின் கணவர் சக்திவேல் ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சந்திராவின் கணவர் சக்திவேல், தம்மை ஏமாற்றி கையெழுத்தி வாங்கி சிபிஐ விசாரணை கோரும் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். இதேபோல பிரித்திக் தாய் ஷர்மிளாவும், கணவர் பன்னீர்செல்வம் தங்களை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு திருமணமே செய்து கொண்ட நிலையில் தங்களுக்கு தெரியாமலேயே உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த விவரங்கள், உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்த 2 வழக்குகளிலுமே, மனுதாரர்களுக்கு தெரியாமலேயே மனுதாரர்கள் பெயரில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் ஷர்மிளா, சக்திவேல் இருவருமே உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.