ADVERTISEMENT

எஸ்.ஐ.டி விசாரணைக்கு எதிராக தவெக மனு : இன்று விசாரணை!

Published On:

| By Kavi

Hearing on TVK petition against SIT investigation today

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 10) விசாரிக்கிறது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தவெகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என்று கூறிய நீதிபதி கரூர் துயரம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். 

ADVERTISEMENT

இந்த குழு கடந்த 5 நாட்களாக கரூரில் தங்கி விசாரணை நடத்தி வருகிறது. நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய அனுமதியை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மதியழகனை கஸ்டடியில் எடுக்கவுள்ளது. 

இதற்கிடையே சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

கரூர் சம்பவத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்றால் எஸ்ஐடி குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார். 

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா முன்பு விசாரணைக்கு வருகிறது. 

இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சந்திரா என்ற பெண்ணின் கணவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அவரும் சிறப்பு விசாரணை குழுவுக்கு தடை விதிப்பதோடு கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த சூழலில் ஆதவ் அர்ஜுனா நேற்று ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அவர் சமூக வலைதளங்களில் புரட்சியை தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டிருந்த நிலையில், ‘ தனது எக்ஸ் தள பதிவை நீக்கிவிட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் நான் அந்த கருத்தை பகிரவில்லை. 

பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையிலோ அரசை விமர்சிக்கும் வகையிலோ நான் எதுவும் செய்யவில்லை. எனினும் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் காவல்துறை என்மீது வழக்கு பதிவு செய்துள்ளது’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share