பீகாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை உறுதி செய்யப்படும் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பீகாரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் பீகார் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடைவதால், அம்மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதையொட்டி பீகாரில் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜகவை உள்ளடக்கிய என்டிஏ கூட்டணி, முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பீகாரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டாதரிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்தசூழலில் இன்று (அக்டோபர் 9) பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) தலைவருமான தேஜஸ்வி யாதவ், வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அசத்தலான வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “20 ஆண்டுகளாக என்.டி.ஏ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர தவறிவிட்டது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை என்பதை உறுதி செய்வோம். அதற்காக அரசு அமைந்த 20 நாட்களுக்குள் புதிய சட்டம் கொண்டுவருவோம். 20 மாதங்களில் எந்த வீடும் அரசு வேலையில்லாமல் இருக்காது’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நான் அரசு வேலை தொடர்பான வாக்குறுதியை அளித்தேன். ஆனால் குறுகிய காலம் ஆட்சியில் இருந்தாலும், ஐந்து லட்சம் வேலைகள் வழங்கப்பட்டன. எனக்கு முழுமையாக ஐந்து ஆண்டு காலம் கிடைத்திருந்தால் இன்னும் எவ்வளவு செய்ய முடிந்திருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.
“இந்த முறை பீகார் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வேலையின்மையை வேரோடு அகற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். சமூக நீதி மட்டுமல்லாமல், பொருளாதார நீதியையும் பீகார் மக்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்” எனவும் கூறினார்.
