40 பேரை பலி கொண்ட பிரசார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பெயரை சேர்ப்பது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கரூரில் நேற்று (செப்டம்பர் 27) பிரசாரம் செய்தார். நடிகர் விஜய் சுமார் 7 மணி நேரம் தாமதமாக பிரசாரம் செய்ய வந்தார்.
விஜய் பேசிக் கொண்டிருந்த போதே கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. ஆனாலும் 10 நிமிடங்கள் தொடர்ந்து விஜய் பிரசாரம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழக்க பெரும் துயரம் ஏற்பட்டது.
தற்போதைய தகவல்களின்படி மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவையே இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக கரூருக்கு சென்று உயிரிழந்தோர் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல், பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் நடிகர் விஜய் பெயரை சேர்ப்பது தொடர்பாக போலீசார் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.