எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான ‘காந்தாரா’ மூலமாக சினிமா ரசிகர்களின் தேடலுக்கு உரியவராக மாறினார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. பெரும்பொருட்செலவில் உருவான ‘கேஜிஎஃப்’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை விட, அதனைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பெரும்லாபம் தந்த படம் இது. அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘காந்தாரா எ லெஜண்ட் சேஃப்டர் 1’ வரும் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது.
சரியாக பத்து நாட்கள் முன்பாக, இன்று அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 6 மொழிகளில் இப்படம் வரவிருக்கிறது.
நாயகன் சிவா (ரிஷப் ஷெட்டி) வனத்தின் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று சாமியாடும்போது மாயமாக மறைந்ததாக, 2022இல் வெளியான ‘காந்தாரா’ முடிவடைந்திருந்தது.
சிவா மாயமாக மறைந்த பகுதியில், அவரது மகன் வந்து தேடுவதாகச் சொல்கிறது ‘காந்தாரா எ லெஜண்ட் சேஃப்டர் 1’. கூடவே, கடந்த காலத்தில் அந்த இடத்தில் அப்படியென்ன நிகழ்ந்தது என்று கூறுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ‘காந்தாரா’ வனப்பகுதியில் சிவாவின் முன்னோர் வாழ்ந்ததையும், அருகிலுள்ள நாட்டின் அரசனால் அவர்களது இருப்பு கேள்விக்குள்ளானதையும் சொல்கிறது.
இப்படியொரு கதையில் அந்த நாட்டு அரண்மனையிலுள்ள பெண்கள் மீது ‘காந்தாரா’ ஆண்கள் காதல்வயப்படுவது இல்லாமலா போகும்? அதுவும் இந்த ட்ரெய்லரில் வெளிப்படையாகத் தெரிகிறது.
பிறகு பாரம்பரியம், மானம், மரபு, அதனைக் காப்பதற்கான சண்டை என்று பல காட்சிகளின் துணுக்குகள் வந்து நிறைகின்றன.
’ஏஸ்’, ‘மதராஸி’ பட நாயகி ருக்மிணி வசந்த் இந்தப் படத்தில் அரசியாகத் தோன்றியிருக்கிறார். ’ஹண்டர்ர்ர்..’ இந்திப் பட புகழ் குல்ஷன் தேவய்யா இதில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இவர்களோடு ஜெயராம், பிரமோத் ஷெட்டி உட்படப் பலர் இதிலுண்டு. அஜனீஜ் லோக்நாத் இசையமைக்க, அரவிந்த் காஷ்யப் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதன் தயாரிப்பு வடிவமைப்பை பங்கலான் கையாண்டிருக்கிறார்.
இப்படத்தின் ட்ரெய்லர் ஆனது, கிட்டத்தட்ட ‘பாகுபலி’யின் இன்னொரு பிரதிபலிப்பாகத் தோற்றம் தருகிறது.
முதல் பாகம் ஏற்கனவே மூலைமுடுக்கெங்கும் புகழ் பெற்றுவிட்டதால், இதற்கான எதிர்பார்ப்பு விஸ்வரூபமெடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதனை ஓரளவுக்குப் பூர்த்தி செய்தாலே போதும், முந்தைய பாகத்தின் வசூலை ஒரு சில நாட்களில் அள்ளிவிட முடியும்.
என்ன செய்யக் காத்திருக்கிறதோ இந்த ‘காந்தாரா எ லெஜண்ட் சேஃப்டர் 1’?