பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைப் பயன்படுத்தும்போதும் பெண்களின் நேரம் சேமிக்கப்படும். அந்த நேரத்தில் அவர்கள் வேறு வேலைகளைச் செய்ய இயலும். இது இன்னொரு முதலீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 30) திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது தேர்தல் வாக்குறுதியாக கேஸ் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் போது பல அதிகாரிகள் முதலமைச்சரிடம், ‘நீங்கள் எத்தனை பர்னர் உள்ள அடுப்பு என்று சொல்லவில்லை. அதனால் ஒரு பர்னர் இருக்கும் அடுப்பை கொடுத்தாலே போதும், அரசுக்கு செலவு குறையும்’ என்று சொன்னார்கள். அதற்கு முதல்வர் கலைஞர் சொன்ன பதில், ‘நான் இதைத் தேர்தல் வாக்குறுதியாக தரவில்லை. இரண்டு பர்னர் இருக்கும் அடுப்பை கொடுத்தால் அவர்கள் வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு சமையலறையில் இருந்து அந்தப் பெண்கள் வெளியில் வருவார்கள். வாழ்க்கையில் தங்களுக்கு பிடித்த மற்ற விஷயங்களை செய்யத் தொடங்குவார்கள்’ என்றார்.
அதேபோலத்தான் இந்தக் கூப்பன் திட்டமும். சமையலறையில் இருந்து சீக்கிரம் விடுதலை கிடைப்பதற்கான திட்டம்தான் இது. ஒரு வாஷிங் மெஷின் வாங்கும்போது கையில் துவைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் குறையும். பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைப் பயன்படுத்தும்போதும் அவர்களது நேரம் சேமிக்கப்படும். அந்த நேரத்தில் அவர்கள் வேறு வேலைகளைச் செய்ய இயலும். இது இன்னொரு முதலீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கூப்பன் கொடுக்கும்போது ‘இந்தப் பொருட்களைத்தான் நீங்கள் வாங்க வேண்டும்’ என்ற கட்டாயம் இல்லை. எங்கள் வீட்டில் ஏற்கெனவே ஒரு பிரிட்ஜ் இருக்கலாம். அப்படி இருக்கும்போது நாம் மீண்டும் பிரிட்ஜ் கொடுப்பது அவர்களுக்கு பயனற்றதாக மாறிவிடும்.
அதனால், ‘எனக்கு என்ன தேவை? எனது வேலை சுமையை குறைப்பதற்கும், எனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிப்பதற்கும் ஒரு வாய்ப்பைத் தரும் பொருளை நான் தேர்வு செய்கிறேன்’ என்று அவர்களே முடிவு செய்யட்டும்.”
அப்போது செய்தியாளர்கள், “மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் டிவி, மைக்ரோவேவ் அவன் போன்ற பொருட்கள் ஆடம்பரமாகத் தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு கனிமொழி சிரித்துக்கொண்டே, “மைக்ரோவேவ் அவன் எப்படி ஆடம்பரமாகும்? நீங்கள் வீட்டில் போய் கேளுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சாதாரணமாக ஒரு பாத்திரத்தை ஃப்ரிட்ஜில் இருந்து நேராக மைக்ரோவேவ் அவனில் வைத்தால் சூடாகிவிடும். இல்லையென்றால் நீங்கள் அதை எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்னர் அந்தப் பாத்திரத்தை கழுவ வேண்டும். பெண்களுக்குத்தான் அந்த வலி தெரியும்” என்றார்.
