சுற்றுச்சூழல் மாசு: பின்தங்கிய இந்தியா!

By Balaji

|

Published on 25 Jan 2018, 12:00 AM

சுற்றுச்சூழல் மாசால் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 177ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், ஏல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள் உலகப் பொருளாதார அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று, காடுகள் அழிப்பு, மீன் வளம், மீத்தேன், கரியமில வாயு வெளியேறுதல், கழிவு நீர் சுத்திகரிப்பு, விவசாயம், பல்லுயிர் அழிப்பு உள்பட 10 வகையான பிரச்சினைகள் குறித்து 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 177ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டு 141ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 36 இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆய்வில், சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரான்ஸ், டென்மார்க், மால்ட்டா, சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன. நியூசிலாந்து, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களில் ஐரோப்பா கண்டத்தைச் சேராத நாடுகளாக உள்ளன.

மேலும் காற்றின் தரத்தில் இந்தியா, 178ஆவது இடத்திலும், நீர் மற்றும் சுகாதாரத்தில் 145ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் சுகாதார முயற்சிகளை மேம்படுத்த அவசரத் தேவை இருப்பதாகவும், பெண்களுக்கெனத் தனி கழிப்பறைகளைக் கட்ட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel