சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜுயம் பரிந்துரைத்துள்ளது.
இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், பிப்ரவரி 26ஆம் தேதி கூடியது. அப்போது உயர் நீதிமன்றங்களில் நிரப்பபடவிருக்கும் காலி பணியிடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா வரும் மார்ச் 5, 2026 அன்று பணி ஓய்வு பெறுகிறார். எனவே சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கு ஆலோசித்த கொலீஜியம் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை பரிந்துரைத்துள்ளது.
இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் 55ஆவது தலைமை நீதிபதியாக மார்ச் 6ஆம் தேதி வாக்கில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி?

இரவு 10 மணி வரை விசாரணை
சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்ட செய்தி வெளியான சமயத்தில் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.
அதாவது, கேரளாவை வகுப்புவாத கண்ணோட்டத்தில் காட்டும் வகையில், ‘தி கேரள ஸ்டோரி 2’ படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்க கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இடம்பெற்றிருந்தார். இன்று படம் வெளியாக இருந்த நிலையில் நேற்று மாலை அவசர வழக்காக இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இரவு 7.30 முதல் 10 மணி வரை விசாரணை நடந்துள்ளது. இறுதியில் படத்தை இன்று வெளியிட தடை விதிக்கப்பட்டது. கேரள உயர் நீதிமன்ற வரலாற்றில் இப்படி இரவு நேரத்தில் விசாரணை நடப்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும்.
இந்த வழக்கை மிகுந்த கவனத்துடன் விசாரித்து கொண்டிருந்த போதுதான், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.
நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் நீண்ட கால நீதித்துறை பணியில், சாதாரண வழக்குகளைத் தாண்டி, அரசியல் சாசனச் சிக்கல்கள் முதல் மிகவும் சிக்கலான வரிவிதிப்புத தொடர்பான பிரச்சினைகள் வரை பல்வேறு சவாலான வழக்குகளை அவர் கையாண்டுள்ளார்.
போபால் விஷவாயு வழக்கு

3 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காவு வாங்கிய 1984ல் நடந்த போபால் விஷவாயு கசிவு வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நல ஆணையரின் வழக்கறிஞராக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பணியாற்றியிருக்கிறார். பின்னாளில் மத்தியப் பிரதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது, போபால் விஷவாயு பேரழிவில் இருந்து தப்பியவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பில் நல ஆணையராகவும் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில், இழப்பீடு மற்றும் மருத்துவ உதவிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் காலதாமதங்களுக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்துள்ளார்,
அதாவது, ‘இந்தத் துயரத்திலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் நீதிக்காக ஏற்கனவே பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்துவத்தின் தாமதங்கள் அவர்களுக்கு இரண்டாவது பேரிடராக மாறுவதை நாம் அனுமதிக்க முடியாது. தொழில்நுட்பமும் சட்டமும் வேகமாக நகர வேண்டும்” என மக்களுக்காக பேசியுள்ளார்.
வரி சட்டங்கள்

வரிச் சட்டத் துறையிலும், நீதிபதி தர்மாதிகாரி பல குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
ஆயோஜன் ஃபுட் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் vs வருமான வரி உதவி ஆணையர் வழக்கில், வருமான வரித்துறை ஒரு நோட்டீஸ் அனுப்பும் போது ஆரம்பக் கட்டத்திலேயே, உயர் நீதிமன்றங்கள் அதில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். அந்த நோட்டீஸ் அனுப்புவதற்கு வரித் துறைக்கு அதிகாரம் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்று கூறியுள்ளார்.
மற்றொரு வழக்கில், (மறைந்த திருமதி சகுந்தலா தாக்கூர் v வருமான வரி துறை), இறந்துபோனவர்களின் தகவலை வருமான வரித் துறைக்குத் தெரிவிக்க அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் தவறியிருந்தால், அத்தகைய நோட்டீஸ்கள் தானாகவே செல்லாததாகிவிடாது என்று கூறியுள்ளார். அதாவது, வருமான வரித் துறையிடம் தகவல் சொல்லாமல் மறைத்துவிட்டு, பிறகு நோட்டீஸ் வந்தவுடன் “அவர் இறந்துவிட்டார்” என்று சொல்வது சட்டத்தை ஏமாற்றுவதற்குச் சமம் என்ற வகையில் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
மற்றொரு முக்கிய வழக்கான, போபாலில் அமைந்துள்ள மக்கள் மருத்துவக் கல்லூரி வழக்கில் , அறக்கட்டளை அந்தஸ்து கோரும் மருத்துவ நிறுவனங்கள் உண்மையிலேயே பொதுமக்களுக்குச் சேவை செய்கின்றனவா என்பதை ஆராய்ந்த நீதிபதிகள் அமர்வில் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இடம்பெற்றிருந்தார்.
பூண்டு காய்கறியா… நறுமண பொருளா?
நாம் அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ளும் பூண்டு காய்கறியா… நறுமண பொருளா? என்ற நீண்ட கால போராட்டத்துக்கு நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அமர்வு முற்றுப்புள்ளி வைத்தது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பூண்டு காய்கறி வகையைச் சேர்ந்தது என்று அரசு கூறியது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டுகளுக்கான கமிஷன் ஏஜெண்ட் சங்கம் இந்தூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, பூண்டு காய்கறி பட்டியலிலேயே இடம் பெறும். எந்த கமிஷனும் இல்லாமல் மார்கெட்டுகளில் விற்கலாம். இந்த உத்தரவு மத்திய பிரதேசத்துக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறி, விவசாயிகளுக்கு ஏஜெண்டுகளும் நிலவி வந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படி மத்திய பிரதேசத்தில் பல்வேறு வழக்குகளை கையாண்ட நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, 2021 இல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கும், தொடர்ந்து ஏப்ரல் 2025 இல் கேரள உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டார்.
சொத்து உரிமை வழக்கில் முக்கிய தீர்ப்பு!

நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான கேரள உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், “ஒரு இந்து மனைவி, தனது கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெற அவரது அசையாச் சொத்தின் மீது உரிமை கோர முடியும். கணவர் அந்தச் சொத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டாலும் கூட, சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அந்தச் சொத்திலிருந்து பராமரிப்புத் தொகையைப் பெற பெண்ணுக்கு உரிமை உண்டு” என்று கூறியது. கணவர் சொத்தை விற்ற பிறகு அந்தப் பெண்ணால் பராமரிப்புத் தொகை கோர முடியுமா என்ற குழப்பத்திற்கு இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது.
வழக்கறிஞர் முதல் நீதிபதி வரை…
இப்படி பல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்திருக்கும் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் நீதித்துறை பயணம் 1992ல் தொடங்கியது. ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பணியை தொடங்கினார். 2000 முதல் 2015 வரை மத்திய அரசின் நிலையான வழக்கறிஞராக (Standing Counsel) பணியாற்றினார்.
வருமான வரித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, பி.எஸ்.என்.எல், மத்திய கலால் துறை , கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களுக்காக வாதாடிய இவர், 2016ல் மத்தியப் பிரதேச கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதித்துறையில் சுமார்35 ஆண்டுகாலம் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
