கோயிலுக்குள் பட்டியலின மக்களை வழிபட எதிர்த்தால் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கரும்பூர் ஊராட்சியில் பாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நாளை (ஆகஸ்ட் 28) குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த கோயிலில் பட்டியலின மக்களை வழிபட தடுப்பதாக அதே ஊரைச் சேர்ந்த பூபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பாலமுருகன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஆகஸ்ட் 27) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘கரும்பூர் பாலமுருகன் கோயில் பொதுகோயில் தான். அங்கு அனைத்து தரப்பு மக்களும் வழிபட உரிமை உள்ளது’ என்று அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “எந்த சமூகத்தினராக இருந்தாலும் அனைவரையும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். கடவுளிடம் தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்.
நாளை நடைபெறும் குடமுழுக்கு விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு யாரேனும் இடையூறு செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
முன்னதாக விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, இந்த பிரச்சினையால் ஒரு வருடத்துக்கும் மேல் கோயில் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கோயில் திறக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர்.
அதேபோன்று பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் மாரியம்மன் கோயில் தேரை பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவுக்குள் இழுக்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அனைத்து தெருக்களிலும் பாரபட்சமின்றி தேரை இழுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இப்படி ஒவ்வொரு கோயில் விழாவின் போது பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி வருவதும் தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.