பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது புகார் பெறாமலேயே வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கூறியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும், சைவ வைணவ மதங்கள் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பொன்முடியிடம் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. Judge Anand Venkatesh condemns
சட்டமன்றத்தில் அமைச்சர் பொன்முடியை நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று (ஏப்ரல் 17) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. Judge Anand Venkatesh condemns
அப்போது பொன்முடியின் ஆபாச பேச்சை திரையிட செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு அமைச்சர் இப்படி எல்லாம் பேசலாமா? இது முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டும் அல்லவா?
அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெண்களை, சைவ வைணவ மதங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. Judge Anand Venkatesh condemns
அவரது வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து டிஜிபி இன்று மாலை 4.45 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், “வில்லை விட்டு புறப்பட்ட அம்பு போல பொன்முடியின் பேச்சு பெருவாரியாக சென்றடைந்துவிட்டது. அவர் மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் கிடையாது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. Judge Anand Venkatesh condemns
அமைச்சர் பொன்முடி நன்றாக தெரிந்தேதான் இவ்வாறு பேசியிருக்கிறார். அந்த வீடியோ இன்றளவும் இணையத்தில் காணப்படுகிறது.
இவர் பேசிய பேச்சை இந்நேரம் வேறு யாராவது பேசி இருந்தால் அவர் மீது குறைந்தது 50 வழக்காவது போடப்பட்டிருக்கும். Judge Anand Venkatesh condemns
சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் கிடையாது. ஊழலை எப்படி சகித்துக் கொள்ள முடியாதோ, அது போன்று வெறுப்பு பேச்சுகளையும் சகித்துக் கொள்ள முடியாது.
ஏற்கனவே எச் ராஜா, நடிகை கஸ்தூரி ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.
அதோடு ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடியின் தண்டனை தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தவறாக பயன்படுத்தும் வகையில் பொன்முடி செயல்படுகிறார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தையும் நாடலாம் என்றும் குறிப்பிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இந்த நிலையில் வழக்கு மாலை 4 .45 மணிக்கு விசாரணைக்கு வந்த போது, டிஜிபி காணொளி காட்சி மூலமாக ஆஜராகவில்லை.
அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், பொன்முடி பேசியது தொடர்பாக 5 புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி எப்.ஐ.ஆர் போடப்படும் என்று கூறினார்.
இதை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரே குற்றத்திற்காக பொன்முடி மீது பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்ய வேண்டாம். அது வழக்கை நீர்த்துபோகச் செய்துவிடும்., இதுவரை பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தயாராக இல்லை என்றால், அமைச்சருக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணத்தை ஒருபோதும் கொடுத்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.