தனது சர்ச்சைக்குரியப் பேச்சுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக அமைச்சர் பொன்முடி இன்று (ஏப்ரல் 12) தெரிவித்துள்ளார். minister ponmudy apologise for his speech
கடந்த 6ஆம் தேதி அன்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது அவர் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் ஆபாசமாக அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதுதொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், பொன்முடிக்கு எதிராக திமுக எம்.பி கனிமொழி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதன் எதிரொலியாக அவரது துணை பொதுச் செயலாளர் பதவியை முதல்வர் ஸ்டாலின் பறித்து நேற்று உத்தரவிட்டார்.
எனினும் அவருடைய அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என பலத் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வந்தனர்.
இந்த நிலையில் தனது சர்ச்சைக்குரியப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பொன்முடி.
மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!
அதில், “தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன்.
நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என பொன்முடி அதில் தெரிவித்துள்ளார்.