மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜான் பாண்டியன் கூறியிருப்பதாவது: அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது அவர் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்து பேசியது அவசியமற்றது.!
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற விஷயத்தை பேச வேண்டியதை விடுத்து, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசினால் ஆரோக்கியமாக இருக்கும். மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது பற்றி பேசினால் இரு சமூகத்தில் உள்ள நல்ல உறவுகளை முறியடிக்கும் நோக்கத்தோடு பேசுவது ஆரோக்கியமற்றது. எனவே, மதுரை விமான நிலையத்திற்கு நிலம் தந்த “சின்ன உடைப்பு கிராம மக்கள்” இம்மண்ணின் பூர்வக்குடி மக்களான “தேவேந்திர குல வேளாளர்” மக்கள் அப்பகுதியில் வாழுகின்ற அவர்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கையும் மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார்’ அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும்” என்பது தான்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 2018 ஜனவரி 23, அன்று மதுரை அவனியாபுரம் பேருந்துநிலையம், மந்தை திடலில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம நடத்தியுள்ளோம்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் மக்கள் இன்று வரையிலும் போராடி வருகின்றனர். எனவே,தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் இதுபோன்ற பிரச்சாரங்களை மேற்கொள்வது தங்களின் அரசியல் பயணத்திற்கு ஆபத்தானது. கடந்த காலங்களில் அம்மையார் இருக்கும் போது மதுரை விமான நிலையம் பற்றி எங்கோ இதுவரை பேசியது உண்டா? எனவே, தங்களின் அரசியல் பயணத்தில் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டுமே தவிர, குறுகிய எண்ணத்தில் இருப்பது ஆபத்தானது.
எடப்பாடி பழனிசாமி அவர்களே, ஒருவரின் சொந்த நிலத்தை அரசின் பயன்பாட்டிற்கு வழங்குபோது, அவரின் விருப்படி பெயர் வைக்கலாம், ஆனால் ஒரு கிராமம் & ஒரே சமூகமாக இருந்தால் அந்த சமூக மக்கள் விரும்பும் பெயர்கள் சுட்டுவது தான் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவரும், தீண்டாமை ஒழிப்புக்காக முனைப்போடு பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி.வே.இமானுவேல் சேகரன் அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதே பொருத்தமானது. இவ்வாறு ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.