நாட்டின் 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று விருந்து அளிக்கிறார்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெகதீப் தன்கர், பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
இந்த பின்னணியில் 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்; எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களம் காணுகிறார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்காளர்கள். நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். வாக்குப் பதிவுகள் முடிவடைந்த உடன், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள்
நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளதால் 542 பேர் உறுப்பினர்கள்.
மாநிலங்களவையில் 5 எம்.பிக்கள் காலியாக உள்ளதால் 228 எம்.பிக்கள் உள்ளனர்; நியமன எம்.பிக்கள் 12 பேர்.
மொத்தம் 782 பேர் வாக்காளர்கள். இதில் 392 பேரின் வாக்குகளைப் பெற்றால் வெற்றி பெறுவர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பிக்கள் உள்ளனர்.
தற்போதைய நிலையில் ஆளும் பாஜக கூட்டணியின் சிபி ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி தேர்தலில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன.
துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இன்று விருந்து அளிக்கிறார்.
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டால் துணை ஜனாதிபதி பதவி வகிக்கும் 3-வது தமிழர் என்ற பெருமையைப் பெறுவார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
நாட்டின் முதல் துணை ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1952-62) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 7-வது துணை ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் (1984-87), தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
