ராஜன் குறை Is war an alternative form of politics
மன்னராட்சிக் காலத்தில் மன்னர்கள் கைப்பற்றும் நிலப்பரப்பில் உள்ளவர்கள் எல்லாம் அவருடைய குடிகள் ஆனார்கள். அவருக்கு வரி செலுத்தினார்கள்.
அதனால் மன்னர்கள் தொடர்ந்து நாடுகளைக் கைப்பற்ற போர் புரிந்தார்கள். சிற்றரசர்கள் பேரரசர்கள் ஆக விரும்பினார்கள். பேரரசர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்கள். அவர்களை அடக்க பேரரசர்கள் போர் தொடுத்தார்கள்.
ஒரு பேரரசருக்கும் இன்னொரு பேரரசருக்கும் போர்கள் நடந்தன. உலக சக்ரவர்த்தி ஆக வேண்டும் என்றெல்லாம் கூட பலர் ஆசைப்பட்டார்கள். ஒரு பேரரசு உருவாகி சில நூற்றாண்டுகள் நிலைக்கும்; பின்னர் சிதைந்து மறையும். வாரிசுகளுக்கிடையே போர் நடக்கும். நிர்வாகம் சீர்கெடும். பின்னர் மற்றொரு பேரரசு தோன்றும். Is war an alternative form of politics
இப்படிப்பட்ட ஓயாத போர்களிலிருந்து விடுபடவும், அரசமைப்பை நிலைப்படுத்தவும்தான் குடியரசு தத்துவம் உருவானது. இது எத்தகைய விழுமியங்கள் அடிப்படையில் அரசு அமைய வேண்டும் என சிந்தித்தது. அந்த விழுமியங்கள் வகுக்கும் சட்டங்களே ஆட்சி செய்ய வேண்டும். அரசர்கள் தன்னிச்சையாக ஆட்சி செய்யக் கூடாது என்று கருத்து வலுப்பெற்றது.
ரோமப் பேரரசிலே மேட்டுக்குடியினர் அவையான செனட் என்ற அவையே கலந்தாலோசித்து முடிவெடுத்து ஆட்சி செய்யும் குடியரசு முறை இருந்தது. ஜூலியஸ் சீசர் பேரரசராக மாற விரும்பியபோது அவர் கொல்லப்பட்டார். அவருக்குப் பின்னர் அகஸ்டஸ் காலத்தில் பேரரசரின் ஆட்சியாக மாறியது. Is war an alternative form of politics
நவீன காலத்தில், பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சுத் தொழிலும், வர்த்தகமும் பெருகிய நேரத்தில் ஐரோப்பாவில் மீண்டும் குடியரசு சிந்தனைகள் வலுவடைந்தன. மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி மன்றத்திலே இடம்பெற வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. இது காலப்போக்கில் வளர்ந்து சட்டத்தின் ஆட்சியும், மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியும் இணைந்த மக்களாட்சி குடியரசுகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலே தோன்றத் துவங்கின.
அமெரிக்க கண்டங்கள் உலகின் பிற பகுதிகளில் வசிப்பவர்களால் கண்டறியப்பட்டு, ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டு உலக வர்த்தகம் பெருகியது முதலீட்டிய உற்பத்தி முறைக்கும், தொழில் புரட்சிக்கும் வழி வகுத்தது.
இவ்வாறான மாற்றங்களுக்குப் பிறகு மக்களே தங்களை ஆண்டுகொள்ளும் சூழ்நிலையில் மன்னராட்சிக் காலத்துப் போர்கள் குறையும் என எதிர்பார்க்கப் பட்டது. ஏனெனில் இறையாண்மை என்பது மன்னரிடமிருந்து மக்களிடம் நகர்ந்தபிறகு யார் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் மக்கள்தான் மன்னர்கள் என்பதால் எதற்காக நாடு பிடிக்கும் போர்கள் நடக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
தொழிற்புரட்சியில் முன்னணி வகித்த ஐரோப்பாவில் சிறிது காலம் போர்கள் குறைந்தன. ஆனால் தொழில் வளர்ச்சி பெருகியபோது, தொழில் வர்த்தக போட்டிகளால் மீண்டும் போர்கள் உருவாயின.
முன்னர் நடந்த போர்கள் போலன்றி ஐரோப்பிய நாடுகளும், அவர்கள் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளும் சேர்ந்து உலகம் தழுவிய போர்களாக இரண்டு உலகப் போர்கள் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் நடைபெற்றன.
இதற்கு ஒரு முக்கிய காரணம் குடியரசுகளை உருவாக்கும்போது அவற்றினை சாத்தியமாக்க தேசியமும், தேசிய இறையாண்மை கொண்ட அரசுகள் என்ற கருத்தாக்கமும் உருவானதுதான். மன்னர் மீதான விசுவாசம், ராஜ விசுவாசம் ஆகியவற்றிற்காக போரிட்ட தற்குப் பதிலாக தேசபக்தியின் காரணமாக போர்கள் தொடர்ந்தன. Is war an alternative form of politics
போர்களே தேவைப்படாத சர்வதேச கூட்டாட்சிக் குடியரசினை உருவாக்க வேண்டும், உலகின் அனைத்து மக்களும் வளங்களை பகிர்ந்துகொண்டு வாழ வேண்டும் என்பன போன்ற சிந்தனைகள் பல்வேறு சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், கலைஞர்கள் இடையிலேயே தோன்றத்தான் செய்தது. பொது உடமைச் சிந்தனையாளர்களிடையே கூட சர்வதேசியத்திற்கும், தேசிய அளவிலான பொதுவுடமைக்கு முன்னுரிமை என்பவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றின.
உலகின் பல அரசியல் கட்சிகளும் மக்கள் நலன் சார்ந்த சுயாட்சிக் குடியரசிற்கும்,. தேசிய அரசினை மையப்படுத்திய இறையாண்மை நோக்கிற்கும் இடையில் சமரசம் செய்துகொள்பவையாக மாறின. இந்த இறையாண்மை நோக்கு என்பது உயர் வகுப்பினரால், வர்த்தக தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப் பட்டாலும், வெகுமக்களை கவரக் கூடியதாக இருந்தது.
இறையாண்மை நோக்கு அரசு மைய சிந்தனை, அதிகாரக் குவிப்பு சிந்தனை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. மாறாக மக்கள் மைய நோக்கு என்பது அதிகாரப் பரவல், கூட்டாட்சி வடிவங்கள், சமூக நீதி, மக்கள் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. Is war an alternative form of politics
உதாரணமாக காந்தி தன்னுடைய ஹிந்து சுயராஜ்யம் நூலில் யார் ஆள்கிறார்கள் என்பதல்ல, எத்தகைய விழுமியங்கள் சமூகத்தை வழிநடத்துகின்றன என்பதே முக்கியம் என்று எழுதினார். கிராமங்கள் தன்னாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும் என்ற கிராமக் குடியரசு இலட்சியத்தினை உருவகிப்பவராக இருந்தார்.
திலகர் போன்றவர்கள் அரசாட்சி இந்தியர்கள் வசமாகவேண்டும் என்று இறையாண்மை நோக்கிற்கு அழுத்தம் கொடுத்தார்கள். சாவர்க்கர் இந்துக்களே இந்து ராஷ்டிரத்தை ஆள வேண்டும் என்று மத அடையாள இறையாண்மை தேசியத்தை சிந்தித்தார். இவற்றிற்கெல்லாம் இடையில் காங்கிரஸ் கட்சி தேசிய விடுதலையையும், அதே நேரம் குடியரசு நோக்கையும் இணைத்தே சிந்தித்தது எனலாம்.

Is war an alternative form of politics
வெண்டல் வில்கியும், அறிஞர் அண்ணாவும்
வெண்டல் வில்கி என்ற வழக்கறிஞர் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரூஸ்வெல்ட்டிற்கு எதிராக போட்டியிட்டவர். தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும், அவருடைய கொள்கைகளுக்காக அமெரிக்கர்களின் நன்மதிப்பை பெற்றார். போர் நேரத்தில் உலக நாடுகள் பலவற்றிற்கு பயணம் செய்த அவர், பாசிச சக்திகளை ஒன்றுபட்டு முறியடிக்க பிரசாரம் மேற்கொண்டார். அந்த பயணத்திற்குப் பின் அவர் புதியதொரு உலக அரசியலமைப்பு உருவாக வேண்டும் என்று கோட்பாட்டாக்கம் செய்தார். அவர் 1943-ஆம் ஆண்டு எழுதிய ஓருலகம் (One World) என்ற நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
வெண்டல் வில்க்கி முன்மொழிந்த உலக கூட்டாட்சிக் குடியரசு என்ற கருத்தாக்கத்தை அறிஞர் அண்ணா பல இடங்களில் குறிப்பிடுகிறார். அண்ணாவின் சிந்தனை திராவிடக் கூட்டாட்சிக் குடியரசு, இந்திய அல்லது ஆசிய கூட்டாட்சிக் குடியரசு அல்லது வில்க்கியின் உலகக் கூட்டாட்சிக் குடியரசு என எதுவாக இருந்தாலும் எத்தகைய சுயாட்சி உரிமைகள் தமிழ்நாட்டிற்கு இருக்க வேண்டும் என்று சிந்திப்பதாக இருந்தது எனலாம்.
அதனால்தான் அவருடைய திராவிட நாடு என்ற இலட்சியம் தேசியமாக இருக்கவில்லை; மாறாக நான்கு மொழிகள் பேசும் மக்களின் கூட்டாட்சிக் குடியரசாகவே இருந்தது. மக்கள் உரிமைகளைப் பெற தேசியவாதமே உதவும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பெரியார், அண்ணாவின் குடியரசு சார்ந்த, மனுதர்ம மறுப்பை அடிப்படையாகக் கொண்ட சமநீதி விழுமியங்களை மையப்படுத்திய அரசியல் புரியவில்லை. Is war an alternative form of politics

முதலீட்டியத்தின் இரட்டை வேடம் Is war an alternative form of politics
நவீன கால அரசியல் உருப்பெற்றதன் முக்கிய விசையாக ஐநூறு ஆண்டுகளாக விளங்குவது காபிடலிசம் எனப்படும் முதலீட்டியம்தான். முதலீட்டிய திரட்சி என்பது முதலில் தேசிய அளவில் நடக்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக திரட்டப்பட்ட முதலீடு ஏற்றுமதி செய்யப்பட்டு பிற நாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீட்டிய திரட்சியின் இந்த இரண்டு சுழற்சிகளும் ஒன்றோடொன்று பிணைந்தவை என்பதால் முதலீட்டியம் தேசிய அரசுகளையும் வைத்துக்கொண்டு, சர்வதேச முதலீட்டிய வலைப்பின்னலையும் வைத்துக்கொண்டு இயங்குகிறது எனலாம்.
இதனால் தேசிய இறையாண்மை என்பது இல்லை என்றும் சொல்ல முடியாது; இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. அமெரிக்க தேர்தலில், பிரிட்டிஷ் அரசியலில் ரஷிய ஆலிகார்க் எனப்படும் பெரும்செல்வந்தர்கள் தாக்கம் செலுத்துவதாகக் கூறுப்படுவதை பார்க்கும்போது நமக்கு எந்த நாட்டின் அரசியலும் முற்றிலும் தனித்தியங்குவதில்லையோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியாது.
இதில் இன்னொரு முக்கியமான பரிமாணமும் இருக்கிறது. அது என்னவென்றால் முதலீட்டிய குவிப்பின் முக்கிய பரிமாணமான ஆயுத வியாபாரம். உலக நாடுகளின் ராணுவச் செலவுகள் பல்லாயிரம் கோடி ரூபாய்களாக இருக்கும்போது ஆயுதங்கள், போர் விமானங்கள், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி என்பது உலக பொருளாதாரத்தின் முக்கிய பங்காக இருக்கிறது. தேசிய அரசுகள் ராணுவத்திற்காக செலவு செய்தால்தான் ஆயுத வியாபாரம், போர் விமானங்கள் வியாபாரம் ஆகியவை நடக்கும். இதனால் பல நாடுகளுக்கு உலக நிதியமைப்புகள் கடன் கொடுப்பதும், அவை அந்த பணத்தில் ஆயுதங்கள் வாங்குவதும் நடக்கும். மேற்கத்திய நாடுகள் இந்த வியாபாரத்தை முக்கியமாக நம்பியுள்ளன. இதுவும் தேசிய இறையாண்மை அமைப்புகளை ராணுவ இயந்திரங்களாக பேணுவதற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். Is war an alternative form of politics

உள்நாட்டு அரசியலும், வெளி நாட்டுப் போரும்
ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் இருக்கும். இவற்றிற்கு பல்வேறு சார்புகளும், இவை பிரதிநிதித்துவம் செய்யும் நலன்களும் இருக்கும். உதாரணமாக உக்ரைன் நாடு சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்தபிறகு அதில் ஆட்சி செய்த கட்சிகள் ரஷ்ய சார்புள்ளவையாகவே இருந்தன. அவற்றின் மீது அதிருப்தி உருவான போது, அமெரிக்க-ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள் சார்புள்ள கட்சி ஆட்சிக்கு வந்தது.
உக்ரைன் உள்நாட்டு தேர்தல்களில் பலவித அந்நிய தலையீடுகள் நிகழ்ந்த தாக குற்றச்சாட்டுகள் இருதரப்பிலும் உண்டு. மேற்கத்திய நாடு சார்பான கட்சி உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்க முயற்சி செய்வது, ரஷ்யாவை கோபப் படுத்தியதால், அது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு எதிரானது என்று கருதப்பட்டதால் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. Is war an alternative form of politics
இது போல பாகிஸ்தானின் அரசியல் முரண்பாடுகளும் அந்த நாட்டில் ராணுவம் தன்னிச்சையாகக் கூட தீவிரவாதிகளுக்கு பயிற்சி தரும், அவர்கள் இந்தியாவைத் தாக்கும் சாத்தியத்தை உருவாக்குகிறது. ரஷ்யா ஆஃப்கானிஸ்தானத்தில் தனக்கு ஆதரவான ஆட்சியை அமைத்ததும், அதனை வீழ்த்த போராளிகளுக்கு பயிற்சி கொடுக்க அமெரிக்கா பாகிஸ்தானை பயன்படுத்தியதும் இந்த பிரச்சினையின் நீண்ட கால வரலாற்றுப் பின்னணியாக உள்ளது. Is war an alternative form of politics
ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டு அரசியல் முரண்களும், சர்வதேச முரண்களும் பலவிதமான வகைகளில் இணைக்கப்படுகின்றன. இதன் காரணமாக எங்கே அரசியல் முடிகிறது, எங்கே போர் தொடங்குகிறது என்பதை கணிப்பது கடினமாக உள்ளது. தேசத்தின் இறையாண்மை என்ற அளவில் போர்க்காலத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்று பட்டாலும் அவற்றிற்கு இடையேயுள்ள முரண்களும் பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. இதற்கெல்லாம் அடிப்படையில் முதலீட்டிய திரட்சியின் தேவைகள் செயல்படுகின்றன.
அது ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வு, அதனை சமன்செய்ய முனையும் அரசியல் போக்குகளுக்கும், முதலீட்டிய ஆதரவு சக்திகளுக்கும் இடையிலான முரண் என பல்வேறு அரசியல் அழுத்தங்கள், தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வெளிப்படுகின்றன.
இவையெல்லாம் சேர்ந்து மக்களாட்சி குடியரசுகள், பொதுவுடமை அரசுகள் என பல புதிய அரசமைப்புகள் தோன்றிய பின்னும், மானுடத்திற்கு போரற்ற வாழ்வை சாத்தியமாக்க மறுக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் முன்னெப்போதும் இல்லாத அணு ஆயுதங்கள் பயன்பாடு குறித்த அச்சமும் ஒவ்வொரு போரின் பின்னணியிலும் செயல்படுகிறது.
மக்கள் நல அரசியல், இறையாண்மை அரசியல் என்ற முரண்பாடு தீராமல் உலக கூட்டாட்சிக் குடியரசும் போரற்ற உலகமும் சாத்தியமா என்பதுதான் கேள்வி. எப்படி கருத்துள்ள சமூகப் படங்களை விட, வன்முறை நிரம்பிய சாகச கதாநாயகன் படங்கள் மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறதோ அதுபோல இறையாண்மை அரசியலுக்குள்ள கவர்ச்சி, மக்கள் நல அரசியலுக்கு பல நேரங்களில் இருப்பதில்லை.
தமிழ்நாட்டு அரசியல் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் ஏற்படுத்திய கருத்தியல் வெளிச்சத்தில் பெருமளவு மக்கள் நல அரசியலை முதன்மைப்படுத்தி இயங்குவது தமிழர்கள் பெரிதும் மகிழ வேண்டிய அம்சமாகும். Is war an alternative form of politics
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com