சீனாவின் டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை மத்திய அரசு மறுத்துள்ளது.
கொரோனா காலத்தில் இந்தியாவில் வேகமாக பரவிய செயலிகளில் ஒன்று டிக்டாக். சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுக்குச் சொந்தமான இந்த டிக்டாக் செயலியை, அப்போது இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வந்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள இந்திய – சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்.
இதனால் சீனாவுடனான உறவுகள் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 29, 2020 அன்று, தரவு பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி டிக்டாக் மற்றும் சீனாவிற்கு சொந்தமான 58 செயலிகளை மத்திய அரசு திடீரென தடை செய்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீனாவின் டிக்டாக், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அலிஎக்ஸ்பிரஸ் மற்றும் பெண்கள் ஆடை தளமான ஷீன் ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் சில பயனர்கள் டிக்டாக்கின் வலைத்தளங்களை அணுக முடிந்தது, ஆனால் முகப்புப் பக்கத்தைத் தாண்டி செல்ல முடியவில்லை எனத் தெரிவித்தனர்.
அதன்பின்னர் டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்ததாக தொடர்ச்சியாக எழுந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
டிக்டாக்கிற்கான தடையை நீக்கும் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், இதுபோன்ற எந்தவொரு அறிக்கையும் தவறானது மற்றும் அது மக்களை தவறாக வழிநடத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.