உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று வெளியான தகவலுக்கு காவல்துறை விளக்கமளித்துள்ளது.
திருநெல்வேலியில் பாஜக பூத் முகவர்கள் மாநாடு ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார். இதனால் மாநாட்டு பணிகளை தமிழக பாஜகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நெல்லை பாஜகவைச் சேர்ந்த முத்து பலவேசம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், “திருநெல்வேலி மாநகர காவல்துறையை கண்டித்து 20.08.2025 அன்று மாலை 05.00 மணி அளவில் வண்ணாரபேட்டை ரவுண்டானா அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பூத் கமிட்டி மாநாடு வருகின்ற 22.08.2025 அன்று நடைபெறவிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கமுடியாது என்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருமையில் பேசி நான் நினைத்தால் உங்களால் திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாடு நடத்த முடியாது என்று மிரட்டல் விடுத்த திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் பிரசன்னகுமாரை கண்டித்து நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் காந்தி தலைமையில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெறவிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு நெல்லை காவல்துறை விளக்கமளித்துள்ளது.
அதில், “22.08.2025 ம் தேதி நடைபெற இருக்கும் பூத் கமிட்டி மாநாடு நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாநகர காவல்துறை அனுமதி மறுப்பதாக செய்தி ஒன்று பாரதிய ஜனதா கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அறிவுறுத்தல்கள் படி மாநாட்டிற்கான விளம்பர பதாகைகளை அமைக்க மாநகர காவல் துறை சார்பாக மாநாடு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எனவே, முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.